தக்காளி சாதத்தில் கிடந்த எலி - நொடியில் உயிர் பிழைத்த பெங்களூர் போலீசார்.!
dead rat found in tomatto rice given to police
தக்காளி சாதத்தில் கிடந்த எலி - நொடியில் உயிர் பிழைத்த பெங்களூர் போலீசார்.!
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூருவில் நேற்று விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலை உணவு மற்றும் மத்திய உணவு ஹோட்டல்களில் தயார் செய்து வழங்கப்பட்டது. அந்த வகையில், யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கிய தக்காளி சாதத்தில் உயிரிழந்த நிலையில் எலி ஒன்று கிடந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த காவலர் சாப்பாட்டை சாப்பிடாமல் தூக்கி வீசினார். இதுகுறித்த தகவல் மற்ற போலீசாருக்கும் பரவியதால், அவர்களும் உணவை சாப்பிடாமல் குப்பையில் போட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், இந்தத் தக்காளி சாதம் யஷ்வந்தபுரத்தில் உள்ள அசோக் டிபன் சென்டரில் இருந்து வழங்கப்பட்டதும், இந்த டிபன் சென்டரில் இருந்து 180 போலீசாருக்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இதையறிந்த பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுஜித் யஷ்வந்தபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளை, கடுமையாக கடிந்து கொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.200 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் போலீசாருக்கு தரமான உணவு வழங்கவில்லை என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் உயிரிழந்த எலி கிடந்துள்ளது. நல்ல வேளையாக அந்த உணவை யாரும் சாப்பிடவில்லை. அந்த உணவை யாராவது சாப்பிட்டு இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும்.
ஆகவே செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dead rat found in tomatto rice given to police