ஆபத்தான செல்பி! ஆந்திர அருவியில் பிளஸ்-2 மாணவிகள் பலி...! - உயிருக்குப் போராடும் தோழிக்குத் தீவிர சிகிச்சை!
Dangerous selfie Plus 2 students die Andhra waterfall Friend intensive care fighting life
ஆந்திர மாநிலம் அல்லூரி மாவட்டத்தின் அனந்தகிரி மண்டலத்தில் அமைந்துள்ள முலகும்மி அருவி, எதிர்பாராத ஒரு கோர விபத்தினால் சோகத்தில் மூழ்கியுள்ளது. சமீபத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதி முடித்த உற்சாகத்தில், ஹுக்கும்பேட்டை மண்டலம் லுக்கபர்தி பகுதியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் இந்த அருவிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

இயற்கையின் எழிலை ரசித்தபடி, அருவியின் விளிம்பில் நின்று அவர்கள் 'செல்பி' எடுக்க முயன்றபோது, சற்றும் எதிர்பாராத விதமாகப் பாறையில் கால் வழுக்கி அனைவரும் சீறிப்பாயும் நீரில் விழுந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில், திரிஷா (17), ரத்தினகுமாரி (16) மற்றும் பவித்ரா (16) ஆகிய மூன்று மாணவிகள் நீரின் வேகத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் சென்ற அஞ்சலி என்ற மாணவி மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டார்.
தற்போது அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; எனினும் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மகிழ்ச்சியாகத் தொடங்கிய ஒரு சிறு சுற்றுலா, செல்பி மோகத்தால் பெரும் உயிர்ச் சேதத்தில் முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தகுந்த பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.
English Summary
Dangerous selfie Plus 2 students die Andhra waterfall Friend intensive care fighting life