உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பு தினம்: வெளிநாடுகளின் தலைமை நீதிபதிகள் பங்கேற்பு..!
Chief Justices of foreign countries participate in Constitution Day at the Supreme Court
அரசியலமைப்பு தின விழா, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பல நாடுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகள் பங்கேற்றுள்ளனர். இலங்கை தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, பூடான் தலைமை நீதிபதி லியோன்போ நோர்பு, கென்யா தலைமை நீதிபதி மா்ரதா கோமே, மொரிஷியஸ் தலைமை நீதிபதி ரெஹானா பீபி, ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன், கென்யா, இலங்கை, நேபாளம் மற்றும் மலேஷியா நாடுகளின் மூத்த நீதிபதிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை நடவடிக்கைகளை பார்வையிட்டனர். அவர்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் வரவேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மொரிஷியஸ் தலைமை நீதிபதி ரெஹானா பீபி பேசியபோது கூறியதாவது: ''சட்டத்தை படிப்பதிலும், விளக்குவதிலும் இந்திய நீதிமன்றங்களால் நாங்கள் வழி நடத்தப்படுகிறோம். இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி சூர்ய காந்தை வாழ்த்துவதில் மற்ற நீதிபதிகளுடன் நானும் இணைகிறேன். இந்த அமர்வு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. '' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கென்யா தலைமை நீதிபதி மார்த்தா கோம் பேசுகையில் கூறியதாவது: ''இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை மற்றும் பணிகளை தனது நாடு எதிர்நோக்குகிறது. இந்தியாவில் மட்டும் அல்லாமல், அனைத்து பொதுச் சட்ட நாடுகளிலும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த இணைந்து பணியாற்றுவதில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.'' என்று கூறியுள்ளார்.
டில்லி பல்கலையில் உள்ள சட்ட மையத்தில் படித்தவரான பூடான் தலைமை நீதிபதி லியோன்போ நோர்பு கூறுகையில் தெரிவித்துள்ளதாவது:

''இந்தியாவில் மிகத்திறமையான, புத்திசாலியான, வல்லுநர்கள் உள்ளனர். இயற்கை வளத்தில் இந்தியா மிகப்பெரிய நாடாக உள்ளது. இந்திய அரசியலமைப்பு 106 திருத்தங்களை சந்தித்துள்ளது. நான் டில்லியில் படித்த போது 91 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்தியா மீது மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன பேசுகையில் கூறியதாவது: ''இந்த வாய்ப்பு அளித்ததற்கு பெருமைப்படுகிறேன். நாம் ஒரே மாதிரியான பாரம்பரியத்தையும், சட்ட அமைப்பையும் பகிர்ந்து கொள்கிறோம். இன்றைய அமர்வில் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். சென்னை உயர்நீதிமன்றம் 1800-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலங்கை சுப்ரீம் கோர்ட் 1801-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Chief Justices of foreign countries participate in Constitution Day at the Supreme Court