பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் விவகாரம்: மத்திய அரசு சொன்ன முக்கிய செய்தி!
Central Government old rupee 500
கருப்பு பணம், கள்ளநோட்டுகள், மற்றும் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு 2016 நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. இதன் மூலம் அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களின் முன் மக்கள் மணிநேர கணக்கில் வரிசையில் நின்று பணத்தை மாற்றி கொள்ளும் அவலநிலையைக் கடந்து சென்றனர். அந்த நிகழ்வின் ஒன்பதாவது ஆண்டு இன்று நிறைவடைகிறது.
இன்னும் சிலர் பழைய நோட்டுகளை கைவசம் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த நோட்டுகள் இப்போது மதிப்பிழந்து காட்சிப் பொருள்களாக மட்டுமே மாறியுள்ளன. பலர் அவற்றை நினைவுச் சின்னங்களாக வைத்திருக்கின்றனர்; சிலர் அவசரத் தேவைகளில் பயன்படுத்த முடியாமல் தவிப்பதையும் காணலாம்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் “ரிசர்வ் வங்கி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது” என்ற தகவல் பரவி வருகிறது. இது பலரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தி பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த தகவல் முற்றிலும் தவறானது. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலேயே மட்டும் கிடைக்கும்,” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
English Summary
Central Government old rupee 500