பீஹாரின் புதிய அமைச்சரவையில் நிதிஷ் இடமிருந்த உள்துறை பாஜக வசம்; முழு விபரங்கள் உள்ளே..!
BJP takes over Home Ministry from Nitish in Bihars new cabinet
பீகாரில் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் பாஜகவினருக்கே மிகப்பெரிய பங்கு மற்றும் முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
அதன்படி, முதல்வர் வசம் பொதுநிர்வாகம், அமைச்சரவை செயலகம் உள்ளிட்ட துறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் வசம் இருந்த உள்துறை, தற்போது பாஜகவின் துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 26 அமைச்சர்களில் பாஜகவைச் சேர்ந்த 14 பேருக்கு சுகாதாரம், சாலை கட்டுமானம், விவசாயம் போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வரான பாஜகவைச் சேர்ந்த விஜய்குமார் சின்ஹாவுக்கு வருவாய் மற்றும் கனிமவளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 08 இலாகாக்களும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 02 இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா ஒரு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய அமைச்சரவையில் பாஜக வசம் இருந்த நிதித்துறை, இந்த முறை ஜெ.டி.யு. கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பிஜேந்திர பிரசாத் யாதவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 31 வயது இளம் அமைச்சரான ஷ்ரேயசி சிங்கிற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெடியு-வின் சுனில் குமாருக்கு கல்வித் துறையும், திலீப் ஜெய்ஸ்வாலுக்கு தொழில் துறையும், லகேந்திரகுமார் பஸ்வானுக்கு பட்டியலின மற்றும் பழங்குடியினர் துறையும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பிரமோத்குமார் சந்திரவன்ஷிக்கு கூட்டுறவு மற்றும் வனத்துறையும், சந்தோஷ்குமார் சுமனுக்கு நீர்வளத் துறை இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 89 இடங்களில் வென்றதால் முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என பாஜக மேலிடம் கூறியதன்பேரில் இந்த அமைச்சரவை பகிர்வு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
BJP takes over Home Ministry from Nitish in Bihars new cabinet