டில்லி செங்கோட்டை தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம்; ஜம்மு - காஷ்மீரில் மற்றுமொருவன் கைது..!
Another person arrested in Jammu and Kashmir in connection with the Delhi Red Fort suicide attack
தலைநகர் டில்லி செங்கோட்டையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக, ஜம்மு காஷ்மீரில் மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த 10-ஆம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பயங்கரவாதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தற்கொலை படை தாக்குதலை நடத்திய பயங்கரவாதியான காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் நபிக்கு, பரிதாபாத்தில் இயங்கி வரும் அல் பலாஹ் பல்கலையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக 'ஒயிட் காலர்' பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்த டாக்டர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், தற்கொலைப்படை தாக்குதலுக்கு கார் வாங்கிக் கொடுத்த முக்கிய நபரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பதால், என்ஐஏ அதிகாரிகளுடன் சேர்ந்து அம்மாநில புலனாய்வுத் துறையினரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், 'ஒயிட் காலர்' பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவனான துபைல் நியாஷ் பட் என்பவனை ஜம்மு காஷ்மீர் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். இவன், பாதுகாப்பு படையினருக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் பயங்கரவாதிகள் போஸ்டர் ஒட்டியதன் பின்னணியில் இருந்தவன் என்று கண்டறியப்பட்டுள்ளது.
English Summary
Another person arrested in Jammu and Kashmir in connection with the Delhi Red Fort suicide attack