பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை!
Bihar Legislative Assembly Election Holiday with pay on polling day
பீகார் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகாரில், நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை) அன்று முதற்கட்டத் தேர்தலும், இரண்டாம் கட்டத் தேர்தல் 2025 நவம்பர் 11 (செவ்வாய்க்கிழமை) அன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் 2025 நவம்பர் 11 அன்று நடைபெறும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 135பி - ன் படி, எந்தவொரு வியாபாரம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனங்கள் அல்லது வேறு எந்த நிறுவனத்திலும் பணிபுரியும் மற்றும் மக்கள் சபை அல்லது மாநிலம் /யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
அத்தகைய ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதற்காக ஊதியத்தில் எந்தவிதக் குறைப்பும் செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் எந்தவொரு தொழில் அல்லது வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அனைத்து தினசரி ஊதியம் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
தங்களது தொகுதிக்கு வெளியே அமைந்துள்ள தொழில் அல்லது வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்கள் (சாதாரண மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் உட்பட), வாக்களிக்கச் செல்லும் தொகுதியில் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்டவர்கள், வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெற உரிமை உண்டு என்று ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றபட வேண்டும் என்றும், அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை சுதந்திரமாகவும் வசதியாகவும் செலுத்துவதை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தேவையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடுமாறு அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Bihar Legislative Assembly Election Holiday with pay on polling day