அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீதான வழக்குகள் தள்ளுபடி: 'With Prejudice' பிரிவின் கீழ் நிரந்தர முற்றுப்புள்ளி!
Big Relief for Gautam Adani US Court Dismisses Criminal Fraud Cases Permanently
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கௌதம் அதானி மற்றும் அவருடைய மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து கிரிமினல் மோசடி வழக்குகளையும் நியூயார்க் நீதிமன்றம் நிரந்தரமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது அதானி குழுமத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள மிக முக்கிய சட்ட வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
சூரிய மின்சக்தி ஒப்பந்த விவகாரம்:
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில், இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இந்த விவரங்களை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி மற்றும் கடன்களைத் திரட்டியதாகவும் கௌதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்கப் பங்குகளின் ஒழுங்காற்று வாரியம் (SEC) மற்றும் நியூயார்க் நீதிமன்றத்தில் கிரிமினல் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அபராதம் மற்றும் தீர்வு: இந்த வழக்கில் தங்களது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலும், அதே சமயம் அதை மறுக்காமலும் சிவில் விவகாரங்களை முடிவுக்குக் கொண்டு வர கௌதம் அதானி 6 மில்லியன் டாலர் மற்றும் சாகர் அதானி 12 மில்லியன் டாலர் என மொத்தம் 18 மில்லியன் டாலர்களை அபராதமாகச் செலுத்த கடந்த வாரம் ஒப்புக்கொண்டனர்.
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு: இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க நீதித்துறை (DOJ) நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்த விவகாரத்தில் போதிய ஆதாரங்களோ, அமெரிக்காவுடன் நேரடித் தொடர்போ இல்லாததால் தங்களது கூடுதல் நேரத்தையும் வளங்களையும் இந்த வழக்கிற்குச் செலவிட விரும்பவில்லை எனத் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் ஏற்ற நீதிமன்றம், 'With Prejudice' என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்தது. இதனால் இதே ஆதாரங்களைக் கொண்டு அதானிக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் ஒருபோதும் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வர முடியாது.
ஈரான் எல்பிஜி (LPG) இறக்குமதி வழக்கு:
இதற்கிடையே, அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீறி, ஈரானில் இருந்து எல்பிஜி எரிபொருளை அதானி குழுமத்திற்குச் சொந்தமான குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வழியாக இறக்குமதி செய்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்திருந்தது. துபாயைச் சேர்ந்த ஒரு இடைத்தரகர் ஓமன் மற்றும் ஈராக் எரிபொருள் எனக் கூறி இதனை அதானி குழுமத்திற்கு விநியோகித்தது விசாரணையில் தெரியவந்தது.
அபராதத்துடன் சுமுகத் தீர்வு: இந்த விவகாரத்தில் அதானி குழுமம் அமெரிக்காவின் 'OFAC' (Office of Foreign Assets Control) அமைப்புடன் முழுமையாக ஒத்துழைத்து, தங்களது தரப்பு ஆவணங்களை முன்கூட்டியே தாக்கல் செய்தது. மேலும், இதில் தங்களது தவறு ஏதும் இல்லை எனத் தெளிவுபடுத்திய அதானி குழுமம், சாத்தியமான சிவில் பொறுப்புகளை முடிவுக்குக் கொண்டு வர 275 மில்லியன் டாலர் (சுமார் ₹2,280 கோடி) தொகையைத் தீர்வுத் தொகையாக (Settlement) செலுத்த ஒப்புக்கொண்டது.
இதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத் திறைசேரித் துறை, இந்த வழக்கையும் முழுமையாக முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் நீடித்து வந்த அனைத்து முக்கிய சட்டப் போராட்டங்களும் ஒரே நாளில் முடிவுக்கு வந்துள்ளதால், அதானி குழும பங்குகள் பங்குச்சந்தையில் மீண்டும் அசுர வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளன.
English Summary
Big Relief for Gautam Adani US Court Dismisses Criminal Fraud Cases Permanently