பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி!
asia cup 2025 t20 team india
துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் முதலில் விளையாடி 19.1 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இந்தியா 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. போட்டி முடிந்ததும் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் சிறந்த வீரர் விருதுகள் வழங்கப்பட்டன. பாகிஸ்தானுக்கு ரன்னர்-அப் காசோலை அளிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கும் நிகழ்ச்சி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தாமதமானது. இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி கையில் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். இதனால் கோப்பை மேடையில் நீண்ட நேரம் இருந்தது. இறுதியில் வங்கதேசத்தின் அமினுல் இஸ்லாம் பதக்கங்களை வழங்கினார். ஆனால் நக்வி பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவுக்கு ரன்னர்-அப் காசோலையை மட்டும் கையளித்தார்.
பின்னர் இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பை போல சைகை செய்து கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் கோப்பை இல்லாமலே வெற்றியை கொண்டாடினர். பிசிசி செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா, “பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை பெறமாட்டோம்; விரைவில் கோப்பை இந்தியாவிற்கு அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம் இந்த முடிவுக்குக் காரணமாக கூறப்படுகிறது.
English Summary
asia cup 2025 t20 team india