அல்பலாஹ் பல்கலை நிறுவனர் ஜாவேத் அகமது சித்திக் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது..!
Alfalah University founder Javed Ahmed Siddique arrested by Enforcement Directorate officials
தலைநகர் டில்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியவர்கள் பின்னணியில் மையப்புள்ளியாக இருக்கும் அல்பலாஹ் பல்கலை நிறுவனர் ஜாவத் அஹமது சித்திக்கை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 10-ஆம் தேதி டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பயங்கரவாதி உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரியானாவின் பரிபாதாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையை சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பவன் வெடிபொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்தமை விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அதே பல்கலையை சேர்ந்த சில டாக்டர்களுக்கு இந்த பயங்கரவாத சதியில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்கலை வளாகத்தில் என்ஐஏ அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் டில்லி போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான பணமோசடி வழக்கில் பல்கலை துணைவேந்தர் ஜாவத் அஹமது சித்திக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏமாற்றுவதற்காக , ' நாக்' அமைப்பின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக, இந்த பல்கலை செய்த விளம்பரம் தொடர்பாக டில்லி குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குப்பதிவு செய்த நிலையில், அதனை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையில், போலி தனியார் வங்கி தொடங்கி, முதலீடுகளை இரட்டிப்பாக்குவதாக பொய் வாக்குறுதி அளித்து, நுாற்றுக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில், அல் பலாஹ் பல்கலை நிறுவனர் ஜாவத்தின் சகோதரர் ஹமூத் அகமதுவை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டு, அம்மாநிலத்தின் மோவ் பகுதியில் முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டு, 25 ஆண்டுகளாக, இவர் ஹைதராபாதில் தலைமறைவாக இருந்துள்ளார். விசாரணை ஜாவத்தின் பின்னணி குறித்து விசாரிக்கும் போது, சகோதரர் ஹமூத் பற்றியும் தெரியவந்ததால், பழைய வழக்கை போலீசார் துாசி தட்டியுள்ளனர்.
அப்போது ஹைதராபாதில் தங்கியிருந்த ஹமூத் அகமது பிடிபட்டுள்ளார். தலைமறைவாக இருந்த ஆண்டுகளில், பின்னணியில் இருந்து இவரை இயக்கியவர்கள் யார் என்பது குறித்து மத்திய பிரதேச போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
English Summary
Alfalah University founder Javed Ahmed Siddique arrested by Enforcement Directorate officials