ஆன்லைன் மோசடியில் சிக்கி 25 வயது வங்கி அதிகாரி தற்கொலை!
A 25-year-old bank officer committed suicide after getting caught in an online scam
குஜராத், அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி பூமிகா சோரதியா (25), ஆன்லைன் மோசடியில் ரூ.28 லட்சம் இழந்ததால் மன உளைச்சலில் வங்கி வளாகத்திலேயே பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் 25 வயதான பூமிகா சோரதியா என்ற பெண் அதிகாரி பணியாற்றிவந்தார்.சம்பவத்தன்று பூமிகா வங்கி வளாகத்திலேயே பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி பூமிகா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, பூமிகா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் தனக்கு ரூ.28 லட்சம் கடன் இருப்பதாக , அந்த பணத்தை தன்னால் திருப்பி செலுத்த முடியாததால் இந்த முடிவை எடுப்பதாகவும்,
மேலும் தனது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும்போது தனது பெற்றோர் ஒரே ஒரு முறை தன்னை கட்டிப்பிடிக்க வேண்டும் என்றும், இதுவே தனது கடைசி ஆசை என்றும் பூமிகா அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார். பூமிகா டெலிகிராம் செயலி மூலம் ஒரு ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளார் என்பதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர்.
பூமிகாவிடம் ரூ.500 முதலீடு செய்யுமாறு கூறி, அவர்கள் கூறும் பணிகளை முடித்த பிறகு ரூ.700 சன்மானம் தருவதாக கூறியுள்ளனர். அதிக லாபம் கிடைக்கும் என்று நினைத்து பூமிகா கடன் வாங்கி பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். அவர் எதிர்பார்த்தபடி லாபம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பூமிகா, இறுதியில் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக பூமிகாவின் பெற்றோர் அளித்துள்ள புகாரில், சம்பந்தப்பட்ட ஆன்லைன் மோசடி கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
A 25-year-old bank officer committed suicide after getting caught in an online scam