தட்டாஞ்சாவடி தொகுதியில் நாளை வாக்குப் பதிவு: துணை ராணுவப்படை, போலீஸார் அடங்கிய 1,300 பேர் பாதுகாப்பு..!
1300 personnel deployed for security duty ahead of tomorrows polling in the Thattanchavady constituency
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (அக்.6) நடைபெறவுள்ள நிலையில், துணை ராணுவப்படை, போலீஸார் என 1,300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை, தலைமைத் தேர்தல் ஆணையம், கடந்த மாதம் 07-ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
அதன்படி, நாளை நடைபெறவுள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 06 பேர், சுயேச்சைகளாக 05 பேர் என மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், திமுக வேட்பாளர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு.சலீம் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்த தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் 12,575 பேர், பெண் 14,341 பேர், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் அடங்குகின்றனர். இதில் 350 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 03 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்கும். புதிதாக சேர்க்கப்பட்ட 584 பேருக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நாளை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த தலா 46 வாக்கு பதிவு மற்றும் கட்டுப்பாடு இயந்திரங்கள், 48 விவிபாட் இயந்திரங்கள் என 140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை பரிசோதனை முடிந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இதிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் 31 வாக்கு சாவடிகளுக்கும் நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பணிக்காக அரசு ஊழியர்கள் 148 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 31 வாக்குச்சாவடிகளுக்கு தலைமை வாக்குச்சாவடி அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகள் 1, 2, 3 என பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 23 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் 67 பேருக்கும் மற்றும் 40 சதவீதத்திற்கு மேலான மாற்றுத்திறனாளிகள் 37 பேருக்கும் சிரமத்தைப் போக்க அவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டது. அதன்படி இந்த வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடி வாக்களித்துள்ளனர்.
இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் பொருட்டு இரு தினங்களுக்கு தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
1300 personnel deployed for security duty ahead of tomorrows polling in the Thattanchavady constituency