தமிழகத்தில் வேகமெடுக்கும் பன்றிக்காய்ச்சல்...! - 19-ல் இருந்து 339 ஆக உயர்வு...!
Swine flu in Tamil Nadu Increase from 19 to 339
இன்புளூயன்சா வைரஸ் மூலம் ஏற்படும் சுவாசத் தொற்று நோயான பன்றிக்காய்ச்சல், தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 19 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக பல மடங்கு உயர்ந்துள்ளது.பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகக் கருதப்படும் இந்தத் தொற்று, தற்போது பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்தும் மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக உள்ளது.

இதனால் நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், தமிழகத்திலும் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதையடுத்து, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சல் பாதிப்பின்போது திடீரென அதிக காய்ச்சல், தொடர்ந்து இருமல், தொண்டை வலி, உடல் வலி, தசை வலி, மூட்டு வலி, தலைவலி, கடுமையான சோர்வு மற்றும் குளிர் நடுக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.இதுதவிர, மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி போன்ற தீவிர அறிகுறிகளும் ஏற்படக்கூடும்.
குறிப்பாக இதுபோன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்.
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Swine flu in Tamil Nadu Increase from 19 to 339