கோரக்பூரில் மருத்துவ அலட்சியம்! கண்புரை அறுவை சிகிச்சை தொற்றால் கண்களை இழந்த 9 நோயாளிகள்...! - மருத்துவமனைக்கு சீல்
Medical negligence Gorakhpur 9 patients lose their eyes due to infection during cataract surgery Hospital sealed
உத்தர பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முகாமில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பலர் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றிருந்தனர்.அறுவை சிகிச்சை முடிந்ததும், வழக்கமான கண்காணிப்பிற்குப் பிறகு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால் மறுநாள் பலருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்ணில் தாங்க முடியாத வலி, வீக்கம், ரத்தக்கசிவு போன்ற கடுமையான பிரச்சினைகள் தோன்றின. இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைக்குத் திரண்டனர்.
பின்னர் செய்யப்பட்ட பரிசோதனையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்ணில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. நிலைமை மோசமடைந்ததால், நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் டெல்லி, லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
தொற்று மேலும் பரவாமல் தடுக்க கடுமையான மருத்துவ முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி 9 பேருக்கு ஒரு கண் அகற்றப்பட்டது. மேலும் 9 பேருக்கு பார்வை முழுமையாக பறிபோனது. ஒரே ஒரு நோயாளி மட்டுமே மீண்டும் பார்வையைப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து மூடினர். மாவட்ட நிர்வாகம் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தவறு செய்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Medical negligence Gorakhpur 9 patients lose their eyes due to infection during cataract surgery Hospital sealed