தொட்டிலும் புத்தகமும் ஒன்றாக…! 2 நாள் கைக்குழந்தையுடன் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய தாயின் துணிச்சல் சாதனை...!
Brave feat mother who wrote 12th standard exam 2 day old baby
“ஒரு ஆண் கல்வி கற்றால் ஒருவரே முன்னேறுவார்; ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு தலைமுறையே உயர்வடையும்” என்ற பொன்மொழிக்கு உயிரூட்டும் நிகழ்வாக, பிரசவம் முடிந்து இரண்டு நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு அரங்கில் அமர்ந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய இளம் தாய், பல பெண்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளார்.

மராட்டிய மாநிலம் மாநிலத்தின் நாந்தெட் பகுதியைச் சேர்ந்த 21 வயது சீத்தல், வறுமை காரணமாக ஒரு கட்டத்தில் தனது படிப்பை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் கல்வியின் மதிப்பை உணர்ந்த அவர், பின்னர் மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்தார்.
திருமணத்திற்குப் பிறகும் படிப்பை கைவிடாமல், ஸ்ரீபாசவேஷ்வர் ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார்.மேலும், இல்லற வாழ்க்கையின் நடுவே, சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.
பொதுத்தேர்வு நேரத்தில் இந்தப் பிரசவம் ஏற்பட்டாலும், அது அவரது கனவுகளுக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற உறுதியுடன், “அடுத்த ஆண்டு பார்க்கலாம்” என்று ஒத்திவைக்காமல் உடனே தேர்வு எழுத தீர்மானித்தார்.மேலும், குழந்தை பிறந்த இரண்டே நாட்களில், தனது சகோதரியுடன் தேர்வு மையத்துக்குச் சென்று ஆங்கிலத் தேர்வை எழுதினார்.
அதன் பின்னர் அரசியல் அறிவியல் தேர்வையும் எழுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.அவரது உறுதியை கண்டு நெகிழ்ந்த தேர்வு மைய அதிகாரிகள், பச்சிளம் குழந்தைக்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தனர்.
அந்த குழந்தை அமைதியாக உறங்க தொட்டில் உள்ளிட்ட உதவிகளும் செய்யப்பட்டன.கல்வியை தனது வாழ்க்கையின் இரு கண்களாகக் கருதிய இளம் தாய், தாய்மையும் கல்வியும் ஒன்றாகச் சமநிலைப்படுத்தி எழுதிய இந்த
தேர்வு, மராட்டிய மாநிலம் முழுவதும் நெகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் மனவலிமைக்கும் கல்வியின் சக்திக்கும் இது ஒரு உயிருள்ள சான்றாக திகழ்கிறது.
English Summary
Brave feat mother who wrote 12th standard exam 2 day old baby