வாக்குறுதி கொடுத்து மறந்துவிட்டாரா? அரசு மருத்துவர்கள் கோபம்...! - முதல்வருக்கு கடும் கேள்வி
Did he forget about promise Government doctors angry Tough question Chief Minister
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் இதுவரை நிறைவேறாதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவர்கள் போராட்டம் நடைபெற்றபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், “தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படும்” என்று நேரடியாக வாக்குறுதி அளித்ததாக அவர் நினைவுபடுத்தினார்.

ஆனால் ஆட்சி அமைந்த பிறகும் அந்த உறுதி நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.முதல்வராக பொறுப்பேற்ற காலகட்டத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோதும், அச்சமயத்தில் தன்னலமின்றி பணியாற்றிய அரசு மருத்துவர்களின் சேவையை அரசு உரிய முறையில் மதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 கூட அமல்படுத்தப்படவில்லை என்றும், ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் நியாயம் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், எய்ம்ஸுக்கு இணையான ஊதியம் வழங்க தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்தும் அது செயல்படுத்தப்படவில்லை; மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களும் அதிகரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
கொரோனா காலத்தில் பணியாற்றும்போது உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பார் என எதிர்பார்த்தோம்; ஆனால் அதுவும் நடைபெறவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
உயிர்களை காக்கும் துறையின் முதுகெலும்பாக உள்ள அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கத் தவறும் ஒரே மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத இந்த நிலையை மருத்துவ சமூகம் ஒருபோதும் மன்னிக்காது என்று வேதனையுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Did he forget about promise Government doctors angry Tough question Chief Minister