புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு செயற்கை பந்து கிண்ண மூட்டு பொருத்தி கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவர்கள் சாதனை..!
Coimbatore Government Medical College doctors achieve feat by implanting an artificial ball and socket joint in a cancer patient
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மூக்கில்தொழுவு கிராமத்தை சேர்ந்தவர் 57 வயதான ஈஸ்வரன். இவர் கடந்த ஒன்றரை மாதங்களாக இடது தோள்பட்டை வீக்கம் மற்றும் வலி காரணமாக கோவை அரசு மருத்துவ மருத்துவனையில் முடநீக்கியல் மற்றும் எலும்புமுறிவு அறுவை சிகிச்சைப்பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த புற்றுநோய் காரணமாக, அவருடைய தோள்பட்டை அரிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவருக்கு பிரத்யேக செயற்கை பந்து கிண்ண மூட்டு பொருத்தி கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவர்கள் குணம் அடையச் செய்துள்ளனர்.
அதாவது, அவரது இடது தோள்பட்டை பந்து கிண்ணமூட்டு முழுவதுமாக புற்று நோயால் அரிக்கப்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. திசு பரிசோதனையில், 'அது ஸ்க்வாமஸ் செல் கார்சினோமா' என்னும் புற்று நோய் என கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவுக்குழாயில் இருந்து இடது தோள்பட்டை எலும்பிற்கு பரவி இருந்துள்ளது.

எனினும், அவருடைய இடது கையில் ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு சீரான நிலையில் இயங்குவதால் அவரின் இடது கையை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர். இதற்காக மருத்துவர் வெற்றிவேல் செழியன் தலைமையியான எலும்பு முறிவு நிபுணர்கள் முகுந்தன், விஜய் கிருஷ்ணன், ஹரிஹரன், அன்பு விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புக்குழு, அவருக்கு முதல்வரின் விரிவான மமுத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான உலோக மூட்டு பொருத்த முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 27 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கை மூட்டு பொருத்தப்பட்ட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளி ரத்தக்குழாய் மற்றும் நரம்பு பாதிப்பு ஏதுமில்லாமல் நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இம்மாதிரியான தோள்பட்டை மூட்டு அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.03 லட்சம் ரூபாய் செலவாகும். இந்நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களின் இந்த சாதனையை அக்கல்லூரியின் முதல்வர் கீதாஞ்சலி பாராட்டியுள்ளார்.
English Summary
Coimbatore Government Medical College doctors achieve feat by implanting an artificial ball and socket joint in a cancer patient