அம்மை நோயை தடுக்க என்ன செய்யலாம்?
chicken pox
பொதுவாகவே தட்பவெப்பநிலை மாறும்போது வைரஸ்கள் வேகமாக வேலையைக் காட்டத் தொடங்கும். சளி, காய்ச்சல் என தொடங்கி அம்மைவரை பல நோய்கள் தாக்கக்கூடும். குறிப்பாக அம்மை நோயின் தாக்கம், இந்தப் பருவத்தில் அதிகமாக இருக்கும்.
பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை என அம்மையில் பல வகைகள் உண்டு. வேரிசெல்லா சூஸ்டர் என்ற வைரஸ்தான் சின்னம்மை நோய் ஏற்படக் காரணம். பாராமிக்ஸோ குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ், தட்டம்மையை ஏற்படுத்துகிறது.
அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டி போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும்.
உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும். வியர்க்குரு, பெரியம்மை, விளையாட்டம்மை, மணல்வாரி அம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய்களாகும்.
அம்மை நோயை தடுக்க என்ன செய்யலாம்?
சரியான நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்கும், வயதுக்கும் தகுந்த உழைப்பு, உழைப்புக்கு தகுந்த ஓய்வு, உடலை குளிர்விக்கும் உணவுகள், பழங்கள், காய்கள், கீரைகள், தயிர், மோர் சேர்ப்பது, உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றால் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். இதனை சரி வர கண்காணித்து குணப்படுத்தாத நிலையில் மூளை, நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்படக்கூடும்.
வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து மேல் பூச்சாக பூசலாம். சந்தனத்தையும் மேல் பூச்சாக பூசினால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
படுக்கை துணிகளை தினமும் மஞ்சள் கரைத்த நீரில் துவைத்து நிழலில் உலர்த்தி பயன்படுத்தலாம். வீட்டு தலை வாசலில் வேப்பிலையை நிறைய சொருகி வைக்க வேண்டும் அல்லது தோரணம் கட்டி தொங்கவிட வைரஸ் கிருமிகளின் தாக்கம் குறையும்.
காய்ச்சல் அதிகம் இருந்தால் நிலவேம்பு இலைச்சாறு அல்லது பப்பாளி இலைச்சாறு 300 மில்லி அளவு 3 வேளை தேனில் கலந்து குடிக்கலாம்.