வயசானாலும் கண் பார்வை ஷார்ப்பா இருக்கனுமா? நாம் தினசரி செய்யும் சில பழக்கங்கள் கண் பார்வையை பாதிக்கும் – இதை உடனே நிறுத்துங்கள்!
Can eyesight stay sharp even as we age Some of our daily habits can affect our eyesight stop them immediately
நாம் பார்க்கவும், படிக்கவும், வாழ்வை அனுபவிக்கவும் உதவுவது நமது கண்கள் தான். ஆனால் நம்மில் பலர் அதன் முக்கியத்துவத்தை உணர்வதே இல்லை. கண்களில் வலி அல்லது பார்வை குறைவு ஏற்பட்டால் தான் கண்களின் மதிப்பு புரிகிறது. உண்மையில், நாம் அறியாமலே செய்யும் சில பழக்கங்கள் நம் கண் பார்வையை மெதுவாக பாதித்து விடுகின்றன. அந்த ஆபத்தான பழக்கங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
இன்றைய நவீன உலகில், செல்போன், கணினி பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் நீண்ட நேரம் இவற்றை பார்த்துக்கொண்டிருப்பது கண்களில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, மங்கலான பார்வை, கண்களில் வறட்சி, மற்றும் தூக்கமின்மை ஏற்படும்.
இதிலிருந்து கண்களை காப்பாற்ற, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் “20-20-20 விதியை” பின்பற்றலாம். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை, 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளை 20 விநாடிகள் பாருங்கள். இதனால் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும், அழுத்தம் குறையும்.
அடுத்ததாக, சூரிய ஒளியிலிருந்து வரும் அல்ட்ரா வைலட் கதிர்கள் கண்களுக்கு மிக ஆபத்தானவை. இது கண் புரை மற்றும் கண் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கலாம். எனவே வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணிவது கட்டாயம் என்று சொல்லலாம்.
பலர் நீண்ட நேரம் மொபைல் பார்க்கும் போது கண்களில் அரிப்பு ஏற்படுவதால் அவற்றை தேய்த்துக் கொள்வது வழக்கம். ஆனால் இது மிகப் பெரிய தவறு. ஏனெனில் கண்களை தேய்க்கும் போது அதன் இரத்த நாளங்கள் சேதமடையும். இதனால் கருவளையம், சிவப்பு, வீக்கம் போன்றவை ஏற்படும். மேலும், கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் கண்களில் தொற்றை ஏற்படுத்தலாம்.
அதோடு தூக்கமின்மை கூட கண் ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணம். நம்முடைய உடல், மன ஆரோக்கியம் போலவே, கண்களுக்கும் போதிய ஓய்வு தேவை. தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்காவிட்டால், கண்களில் வறட்சி, மங்கலான பார்வை, மற்றும் ஒளி உணர்திறன் குறைவு ஏற்படும். இது நீடித்தால், கண் நோய்களுக்கு வழிவகுக்கும்.
இறுதியாக, பலர் வழக்கமான கண் பரிசோதனை செய்யாமல் இருப்பது மற்றொரு தவறு. கண் பிரச்சனை ஏற்பட்ட பிறகு தான் மருத்துவரை அணுகுகிறோம். ஆனால் வருடத்திற்கு குறைந்தது ஒருமுறை கண் பரிசோதனை செய்தால், பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.
செல்போன், தூக்கமின்மை, சூரிய ஒளி மற்றும் கண்களை தேய்ப்பது போன்ற பழக்கங்களை கட்டுப்படுத்தினால், உங்கள் பார்வை நீண்ட நாள் தெளிவாக இருக்கும்.
English Summary
Can eyesight stay sharp even as we age Some of our daily habits can affect our eyesight stop them immediately