சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதி: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு...! - மத்திய அரசு அவசர உத்தரவு - Seithipunal
Seithipunal


சென்னை அடையாறு பகுதியில் அண்மையில் மர்மமான முறையில் இறந்த காகங்களை ஆய்வு செய்ததில், எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழக சுகாதாரத்துறை தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேலும், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள் மற்றும் பிற பறவைகள் மூலம் மனிதர்களுக்கும் இத்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட பறவைகளின் கழிவுகள் மற்றும் உடல் மூலம் நோய் எளிதில் பரவக்கூடும் என்பதால் கூடுதல் எச்சரிக்கை அவசியமாகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பறவை அல்லது மனிதரிடம் இருந்து மற்றவர்களுக்கு 'வெஸ்ட் நைல் வைரஸ்' போன்ற தொற்றுகளைக் கொசுக்கள் பரப்பும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், நிலைமை தீவிரமாக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரியிலும் காகங்கள் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கிண்டி உயிரியல் பூங்காவிலும் பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது குறித்துச் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் காகங்கள் உயிரிழந்தாலும், இதுவரை மனிதர்களுக்கோ அல்லது பிற பறவைகளுக்கோ பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும், காகங்களின் தொடர் மரணம் காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறந்த பறவைகளை வெறும் கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல், தலைவலி, தசைவலி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

மேலும், கோழி இறைச்சியை நன்கு சமைத்து மட்டுமே உணவாக உட்கொள்ள வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bird Flu Confirmed Chennai Intensive Surveillance Across Tamil Nadu Central Government Issues Urgent Order


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->