போருக்கு சென்ற மன்னனை பிரிந்து வாடும் மனைவி: காதலை உணர்வுபூர்வமாக உணர்த்தும் நெடுநல்வாடை.!!
காதலை உணர்வுபூர்வமாக உணர்த்தும் நெடுநல்வாடை
பாண்டிய நாட்டின் மற்றொரு பரிணாமத்தையும், நெடுநல்வாடை இயம்புகிறது. போருக்குச் சென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வாடும் அவனது மனைவியைப் பற்றியும், அவளைச் சமாதானப் படுத்தும் நோக்கில், காவியமாக வடிக்கப் பட்டிருக்கிறது.
மன்னனைப் பற்றிச் சொன்னால் அவன் வாழ்ந்த அரண்மனையைப் பற்றியும், அவனைச் சார்ந்து வாழ்ந்த மக்கள் உயர்ந்த நிலைகளைப் பற்றியும் சொல்லியாக வேண்டுமே.!

அந்த நோக்கம் இந்த நூலில் செம்மையாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஒரு புறம் தலைவனைப் பிரிந்த தலைவியைப் பற்றியும், மற்றொரு புறம், பாண்டிய நாட்டின் தலைநகர் அமைப்பு, பிரம்மாண்டமான அரண்மனையின் தோற்றம், அகன்ற தெருக்களின் அமைப்பு என்று பாண்டிய நாட்டின் வேறொரு கோணத்தைக் காட்டுகிறது இந்நூல்.
“மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறுகிடந்தன்ன அகநெடுந்தெருவில்”
என்று, ஓங்கிய மாடங்கள் தாங்கிய அரண்மனைகள் நிறைந்த மதுரை மாநகரம் என்று, மதுரையின் செழிப்பினையும், மக்கள் வாழ்வு நிலைகளைப் பற்றியும் அழகுபடத் தமிழில் கூறுகிறது. அகன்ற தெருக்கள் நகரின் கூடுதல் சிறப்பாகக் கருதப் பட்டதையும் நயமாகக் கூறியிருக்கிது இந் நூல். ஓங்கி உயர்ந்த அரண்மனைக் கட்டிடங்களைப் பற்றி,
“நூல் அறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து”
என்று, தெய்வத்தை நோக்கி கும்பிட்டுக் கொண்டிருக்கும் வானுயர்ந்த அரண்மனையின் சிறப்பினையும், மன்னருக்குச் சமமாக வாழ்ந்த வணிகர்களின் அரண்மனையும் அமைந்திருந்தது என்பதை, நம் கற்பனைக்கும் அப்பால், கொண்டு போயிருக்கிறார்கள். அந்த அரண்மனையின் வாசல் கூட சாதாரமாக இல்லையாம்.
“வென்று எழு கொடியோடு வேழம் சென்றுபுக
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்”
ஒரு குன்றிற்குச் சமமான உயரத்தில், அரண்மனையின் வாயில் கதவு இருந்ததாக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
போருக்குச் சென்ற கணவன் வெற்றி பெற்று நலமுடன் நாடு திரும்ப வேண்டும் என்று ஒரு பெண் தெய்வத்திடம் வேண்டுகோள் விடுப்பதைப் பற்றித் தான் நெடுநல்வாடை 188 வரிகளில் பாடலாக உருவாக்கப் பட்டிருக்கிறது.
வாடைக்காற்று காடு மேடெல்லாம் பரவி வருகிறது. காட்டுப் பகுதியில் உள்ள மரங்களுடன் சேர்ந்து கொண்டு, ஊசிக் குளிராக, அங்கே வனத்தில் வசித்துக் கொண்டிருக்கும் ஆயர்களைத் துன்புறுத்துகிறது.

அவர்களது மேனியெல்லாம் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. அதே காற்று மதுரை நகரின் அகன்ற தெருக்களிலும் வீசுகிறது. குளிருக்கு இதமாக மதுபானத்தை அருந்திக் கொண்டிருப்பவர்கள், அந்த வாடைக் காற்றினை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
வாடைக்காற்றின் தாக்கத்தை மது உண்ட போதை மறைத்து விடுகிறது. தெருக்களைக் தாண்டி அந்த வாடைக்காற்று, ஓங்கி உயர்ந்த அரண்மனையின் வழியே அந்தப்புரத்திற்குள்ளும் நுழைகிறது. அந்தக் காற்றின் ஓலம், தலைவனைப் பிரிந்த துயரத்தில், பஞ்சணையில் துயில் கொண்டிருக்கும் தலைவியின் காதில் ரீங்காரமிடுகிறது.
அது ஏதோ மரண ஓலம் போல அவளுக்கு கேட்கிறது. அவள் நடுங்கினாள். துடிதுடித்தாள். இந்நேரம், அவளது தலைவன் எந்த நிலையில் இருக்கிறானோ, என்று அறிய முடியாத பேதையாக அவள் பதற்றத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறாள்.
தோழியர் அவளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். அவளுக்காக தெய்வத்திடம், அவள் துயரைத் துடைக்க, அவளது கணவனைப் பத்திரமாக நாடு திரும்பச் செய்ய வேண்டுமாய் கொற்றவையை வேண்டுகிறார்கள்.

அதே நேரம், அந்த வாடைக் காற்று, போர்ப் பாசறையில், தூக்கம் இன்றித் தவிக்கும் மன்னனிடத்தில் செல்கிறது. அவன் நினைவோ, பகைவர்களை எப்படி வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கிறது. அவனுக்கு அதைத் தவிர வேறு சிந்தனை இல்லை.
தன் கூடாரத்தை விட்டு வெளியே வந்த மன்னன், போரில் காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறுகிறான். தனது வீர உரையால், அவர்களை போர்க்களத்தில் உற்சாகப் படுத்துகிறான்.
அவன் மனம் முழுவதிலும், போரைப் பற்றியும், அதன் வெற்றியைப் பற்றியும் மட்டுமே இருக்கிறது. ஒரே நேரத்தில், தலைவன் மற்றும் தலைவியின் இரு வேறு மனநிலையைப் பற்றிக் கவிதையாகக் கூறுகிறது நெடுநல்வாடை!
English Summary
artical about nedunalvadai