சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் உள்ள மலைக்குன்றுகளில் வாழ்ந்தவர்கள் சமண முனிவர்கள். இவர்களை அமணர்கள் என்றும் அப்போது மக்கள் அழைத்திருக்கிறார்கள்.
அமணர் என்றால், நிர்வாணமாக இருத்தல் என்று பொருள். அதற்கேற்ப சமணர்களும், தங்களது உடலில் எந்தவித ஆடையும் அணியாமல், நிர்வாணமாகவே திரிந்து கொண்டிருந்தனர்.

வாழ்க்கையில் பற்றை அறுத்தால் தான் இறைவனின் திருவடியை அடைய முடியும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தார்கள் சமணர்கள்.
அவர்கள் குளிப்பதில்லை. பல் துலக்குவதில்லை. நகம், முடியைக் கூட வெட்டுவதில்லை. வனங்களில் திரியும் மிருகங்கள் போலே தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டார்கள் அவர்கள்.
இந்த மாதிரியான வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொண்டதால் தான், அவர்கள் ஊருக்குள் எங்கும் வருவதில்லை.
.jpg)
எப்போதும் இறைவனைத் தியானித்திருப்பதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் வசிக்கும் குன்றுகளில், மலையைத் துளைத்துக் கொண்டு வரும், இயற்கையான நீர் ஊற்றுகள் இருந்தன.
மனிதன் உயிருடன் வாழ உணவில்லாவிட்டாலும், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. அதனால் தான் அவர்கள் அந்த மாதிரி நீர் ஊற்றுகள் அமைந்திருக்கின்ற மலைகளில் வாசம் செய்யத் துவங்கினார்கள். ஆனால் அவர்களைத் தேடி மன்னர்களும், மக்களும் வந்தார்கள்.
அவர்களது உண்மையான தவ நிலைகளைக் கண்டறிந்து, அவர்கள் அந்த மலைக் குகைகளில் தூங்குவதற்காக, கல் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தார்கள். அவர்கள் தலை வைப்பதற்கு ஏற்றாற் போல், சிறு திட்டாக அந்த கற்படுக்கைகள் இருந்தன. அவர்கள் வசித்த குகைகளில் மழை நீர் உட்புகாதவாறு, பாறைப் புருவங்களையும் வெட்டிக் கொடுத்தார்கள்.

ஒரு மனிதன் எத்தனை நாள் சாப்பிடாமல், உயிர் வாழ முடியும் என்பதை அறிவதற்காக, இரண்டு, நான்கு, ஆறு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் உணவருந்தியவர்கள், இறுதியாக, எட்டு நாட்களுக்கு ஒரு முறை தான் உணவு உண்டார்கள்.
அந்த உணவு, அடுத்து வரும் எட்டு நாட்களுக்கு போதுமானதாக இருந்தது. எட்டு நாட்களுக்கு ஒரு முறை உணவு உண்டதால் தான், அவர்களை அஷ்டோபவாசிகள் என்று அழைத்தார்கள். அதனால், அவர்கள் எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்தார்கள்.
.jpg)
அவர்கள் உடலில் உயிர் மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தது. உணர்ச்சிகளைத் தூண்டும், நாடி நரம்புகள் எல்லாம் ஒடுங்கி, இறைவனை மட்டுமே எண்ணித் தியானிக்க வேண்டும், என்ற நிலையில் தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.
தற்போதுள்ள சாமியார்கள் போல போலியாக இல்லாமல், உண்மையான துறவறத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்கள்.
மேலும், நமது தமிழ் மொழிக்கு, உருவகம் கொடுத்து, பிராமி என்ற தமிழ் எழுத்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கண்டறிந்து, உலகிற்கு தெரியப்படுத்தியவர்களும் சமணர்கள் தான்.
அதனால், சங்க காலம் தொட்டு, சமண சமயத்தை பெரும்பாலானோர் தழுவியிருந்தனர். சமணர்களின் அறிவுரைப்படி, தங்கள் வாழ்க்கையைப் பின்பற்றி வாழத் துவங்கினார்கள்.
கி.பி.7-ஆம் நூற்றாண்டில், தமிழகத்திற்கு திருஞானசம்பந்தர் வந்த பின்பு தான் சைவ சமயத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட ஆரம்பித்தது. சைவ சமயக் கடவுளான சிவனை சிவலிங்கமாக மக்கள் வழிபடத் தொடங்கினர். அதிலிருந்து, மக்கள் சமண சமயத்தைத் துறந்து சைவ சமயத்திற்கு மாறினார்கள்.

மதுரையில், நின்றசீர் நெடுமாறன் என்ற கூன் பாண்டியனின் வயிற்று வலியை திருஞானசம்பந்தர் போக்கியதாகவும், அதனால் சினம் கொண்ட சமணர்கள் அவரை வாதத்திற்கு அழைத்ததாகவும், அவரும் அதை ஏற்றுக் கொண்டு, அனல் வாதம், புனல் வாதத்தில் வென்று, அவர் ஏடு வைகை ஆற்றில் எதிர் சென்று கரை ஒதுங்கியது என்றும், கூன் பாண்டியனின் கூனும் மறைந்து விட்டதாகவும், இதனால், பாண்டிய மன்னன் வாதத்தில் தோற்ற சமணர்களை ஆயிரக் கணக்கில் கழுவேற்றியதாகவும், புராணச் செய்திகள் கூறுகின்றன.
அந்தக் கதையை பல கோயில்களில் ஓவியங்களாகவும், சிலை வடிவங்களாகவும் வடித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்றே ஆய்வாளர்கள் கருத்து கூறுகிறார்கள்.
இது சமய சமயத்தை ஒழிப்பதற்காக, அவிழ்த்து விடப்பட்ட கட்டுக் கதை. ஆயிரக் கணக்கில் சமணர்கள் இல்லவே இல்லை, என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

இந்த செவி வழிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, பாண்டிய நாடு என்று சொல்லக் கூடிய, மதுரை ராமநாதபுரம் பகுதிகளில் பல கோயில்களில் கழு மரங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன.
அவற்றில் சேவலைப் பலியிட்டு செருகி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்களா இல்லையா என்பதைப் பற்றிய ஆய்வு இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆய்வில் இது பற்றிய கல்வெட்டுக்களைத் தேடி வருகின்றனர்.