தீபாவளி : தமிழர்களின் பண்டிகை இல்லையா..? - Seithipunal
Seithipunal


பண்பாடு என்பது தேங்கி நிற்கும் கிணற்று நீர் போன்றது அல்ல. அது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நதி போன்றது. பண்பாடும் திருவிழாக்களும் சாத்திரங்களில் இல்லை. அவை காலம்தோரும் மனிதர்களின் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே செல்கின்றன.

'ஒரே ஆற்றில் இரண்டுமுறை குளிக்க முடியாது' என்பார்கள். ஏனெனில், சற்றுமுன் ஓடிய நீர் இப்போது மீண்டும் அங்கே இருக்காது. திருவிழாக்களும் அப்படிதான், பெற்றோர்களின் தலைமுறையில் கொண்டாடப்படும் விழாக்கள், பிள்ளைகளின் தலைமுறையில் அப்படியே இருக்காது.

'தீபாவளி தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை அல்ல' என்று தமிழ்நாட்டில் பேசப்பட்டது. 'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். திராவிட கோட்பாடுகளும் தீபாவளியை எதிர்த்தன. ஆனால், பாரம்பரியத்தின் தொடக்கப்புள்ளி சில நூறு ஆண்டுகளா அல்லது பல ஆயிரம் ஆண்டுகளா - என்கிற கேள்விக்கு பதில் தேட முடியாது.

"தமிழர்களின் தொன்மை திருவிழாக்கள்"

தமிழர்களின் தொன்மையான திருவிழாக்கள் என்பன தைப் பொங்கல், கார்த்திகை திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி, பங்குனி உத்திரம், சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, விஜய தசமியில் வன்னி மரத்தில் அம்புபோடுதல் - என்பனவாகும்.

இந்தத் திருவிழாக்கள் சைவமும், வைணவமும் தமிழ்நாட்டில் கோலோச்சுவதற்கு முன்பே, இந்து மதம் என்கிற அடையாளம் உருவாவதற்கும் முன்பே தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட திருவிழாக்கள் ஆகும்.

தமிழர்களின் இந்த தொன்மையான திருவிழாக்களை திராவிட அரசியல் பாரம்பரியம் நிராகரித்தது. ஒருவகையில், திராவிட அரசியல் கோட்பாடு என்பது தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதாகவும் முடிந்தது.

"தீபாவளியின் தோற்றம்"

சமண மதத்தின் வர்த்தமான மகாவீரர் தனது இறந்த நாளை வரிசையாக தீபங்கள் ஏற்றி கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார் (தீபாவளி என்பதன் பொருள் தீப வரிசை ஆகும்). இதே நாளினை 'நரகாசுரன் கொலைசெய்யப்பட்ட நாளாக' வைதீக இந்து மதம் கொண்டாடுகிறது. தமிழ்நாட்டில் நீத்தார் நினைவாக இறுதிச்சடங்கில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை பின்பற்றி, தமிழர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். இது வடஇந்தியாவில் கிடையாது.

தீபாவளி பண்டிகை என்பது தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசின் எழுச்சிக்கு பின்னரே கொண்டாடப்பட்டதாக கருதப்படுகிறது. திருமலைநாயக்கர் இதனை பெரும் விழாவாக மாற்றினார். தீபாவளியின் போது பயன்படுத்தும் வெடிகளும் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே அறிமுகமாகியது.

"தீபாவளி: தமிழர்களின் பண்டிகை"

தமிழ்நாட்டில் கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை நிராகரிக்க முடியாது. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் கார்த்திகை திருவிழாவினை ஒத்திருக்கும் தீபாவளியை, தமிழர்களின் நீத்தார் நினைவை போற்றும் வகையிலான பண்டிகையை - நமக்கு அன்னியமானது என ஒதுக்குவது தேவையற்றது.

அதைவிட முக்கியமாக - திராவிட மாயையில் இருந்து வெளிப்பட்டு "கார்த்திகை திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி, பங்குனி உத்திரம், சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, விஜய தசமியில் வன்னி மரத்தில் அம்புபோடுதல்" - எனும் தமிழர்களின் பாரம்பரிய விழாக்களையும் விமரிசையாக கொண்டாட வேண்டும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Diwali is Tamil festivel or not


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->