போலி போலீஸ் உடையில் ரூ.1.20 கோடி சுருட்டிய பலே கில்லாடி பெண்: ஆந்திராவில் அரங்கேறிய பரபரப்பு மோசடி!
Fake Woman Cop Fleeces 1 Crore and Gold from Couples via Black Magic Scam Hunt on in Andhra
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில், பல ஆண்டுகளாகத் தன்னை ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்று காட்டி உறவினர்களையும் பொதுமக்களையும் நம்ப வைத்து, மந்திரவாதிக் கதையைக் கூறி ரூபாய் 1.20 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்த விசித்திரப் பெண் மற்றும் அவரது கணவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
போலீஸ் உடை அணிந்து நாடகம்:
அனந்தபூர் மாவட்டம், மத்தி நாயண பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது கணவர் ஒரு விவசாயி ஆவார்.
காலை நேர நாடகம்: சரஸ்வதிக்குச் சிறு வயது முதலே காவல்துறை மீது இருந்த மோகத்தால், தினமும் காலையில் எழுந்து அச்சு அசலாகப் பெண் போலீஸ் சீருடையை (Police Uniform) அணிந்து கொண்டு வேலைக்குச் செல்வது போல் வீட்டை விட்டு வெளியேறுவார்.
அனைவரையும் நம்ப வைத்த வித்தை: உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்குச் செல்லும் போது கூட, அவர் அதே போலீஸ் உடையில்தான் செல்வார். தான் அனந்தபூர் மகளிர் காவல் நிலையத்தில் (Anantapur Women's Police Station) பணியாற்றி வருவதாகக் கூறி, சுற்றியுள்ள அனைவரையும் பல வருடங்களாக நம்ப வைத்து வந்துள்ளார்.
கடன் மோசடியும் மிரட்டலும்:
சரஸ்வதியின் போலீஸ் உடையைப் பார்த்துப் பயந்தும், அவர் மீதான மரியாதையாலும் பலர் அவரிடம் நெருங்கிப் பழகினர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட சரஸ்வதி, தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது தம்பியை மேல் படிப்பிற்காக அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்றும் கூறித் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கணவனுடன் சேர்ந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கிக் குவித்துள்ளார்.
போலீஸ் மிரட்டல்: ஒரு கட்டத்தில் கடனைக் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்கத் தொடங்கியபோது, தனது போலி போலீஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி, "பணத்தைக் கேட்டால் உங்களின் மீது பொய் வழக்குப் பதிவு செய்து ஜெயிலில் அடைத்து விடுவேன்" எனப் பலரையும் மிரட்டி வந்துள்ளார்.
குழந்தை பாக்கியம் தருவதாகக் கூறி ரூ.1.20 கோடி அமுக்கல்:
இந்தச் சூழலில் தான், ஆலமூரு பகுதியைச் சேர்ந்த ரங்க நாயக்கலு மற்றும் ராமா நாயுடு ஆகிய இரு குடும்பத்தினருடன் சரஸ்வதிக்கு அறிமுகம் கிடைத்தது. அந்த இரு தம்பதியினருக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லை என்பதை அவர் அறிந்துகொண்டார்.
மந்திரவாதி பூஜை ஏமாற்று வேலை: இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சரஸ்வதி, கர்நாடக மாநிலத்தில் தனக்குத் தெரிந்த ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதி இருப்பதாகக் கூறி, அவர் மூலம் சிறப்புப் பூஜைகள் செய்து கொடுத்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
பணம், நகைகள் பறிப்பு: இதனை நம்பிய அந்த இரு குடும்பத்தினரிடமிருந்தும் வெவ்வேறு காலகட்டங்களில் ஒட்டுமொத்தமாக ரூபாய் 1.20 கோடி ரொக்கப் பணம் மற்றும் 17 பவுன் தங்க நகைகளைப் பறித்துள்ளார்.
சுவிட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவு:
பணத்தைப் பெற்றுக்கொண்டு பல மாதங்கள் ஆகியும் பூஜைகளுக்கான எந்தவொரு ஏற்பாடுகளையும் சரஸ்வதி செய்யவில்லை. இதனால் பலத்த சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அனந்தபூர் காவல் நிலையத்தில் நேரடியாகச் சென்று புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரஸ்வதி நிஜமான போலீஸே கிடையாது என்பதும், அவர் இத்தனை காலம் போலி வேடமிட்டு உலா வந்ததும் அம்பலமானது. போலீஸ் தன்னைத் தேடுவதை அறிந்த சரஸ்வதி, உடனடியாகத் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டுத் தனது கணவருடன் தலைமறைவாகியுள்ளார். தப்பியோடிய இந்த பலே தம்பதியைத் தனிப்படை அமைத்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
Fake Woman Cop Fleeces 1 Crore and Gold from Couples via Black Magic Scam Hunt on in Andhra