“அமைச்சர்களின் ஆர்வக்கோளாறு.. ரீல்ஸ் மோகம்!” உங்க பொண்ணா இருந்தால் இப்படி செய்வீங்களா?”கீர்த்தனாவை விளாசிய லட்சுமணன்! - Seithipunal
Seithipunal


“அமைச்சர்களின் ஆர்வக்கோளாறும், ரீல்ஸ் மோகமும்தான் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு காரணம்” என்று அமைச்சர் கீர்த்தனாவின் செயலை மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஆங்கிலம் தெரியாதது பெரிய குற்றமா? தமிழ் நன்றாகத் தெரிந்தால் அதைவிட பெருமை எதுவும் இல்லை. அந்த மாணவி கீர்த்தனாவின் மகளாகவோ, தங்கையாகவோ இருந்திருந்தால் இப்படி உலகம் முழுவதும் வீடியோவைப் பரப்பி அவமானப்படுத்துவதை வேடிக்கை பார்ப்போமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் காட்டமாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஆர்வக்கோளாறு, ரீல்ஸ் எடுக்க வேண்டும், அது பொதுவெளியில் வர வேண்டும் என்ற போதையில் சிக்கியதன் விளைவுதான் இந்தச் சம்பவம். இது தனிநபராக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி, எல்லா கட்சிகளிலும் இந்த மோகம் இருக்கிறது.

ஆனால், அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு கொஞ்சம் கட்டுப்பாடு அவசியம். அவர்கள் மாண்புமிகு அமைச்சர்கள். அந்த ‘மாண்புமிகு’ என்ற வார்த்தைக்குப் பின்னால் ஆயிரம் அர்த்தங்களும், மிகப்பெரிய பொறுப்புகளும் இருக்கின்றன.

எம்.எல்.ஏக்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதைப் போல, அமைச்சர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தினால் தவறில்லை. பொதுவெளியில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது, எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியுமா, தெரியாதா என்பது இங்கு முக்கியமில்லை. அதை வீடியோவாக எடுத்து உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் எங்களுடைய கேள்வி.

அந்த மாணவி கீர்த்தனாவின் மகளாக இருந்திருந்தால், அவரது தங்கையாக இருந்திருந்தால், இப்படி பொதுவெளியில் விட்டு அவமானப்படுத்தப்படுவதை நாம் வேடிக்கை பார்ப்போமா? இதைச் செய்து நீங்கள் என்ன சாதித்தீர்கள்?

‘நான் ரீல்ஸ் எடுக்கவில்லை, ஊடகங்கள்தான் வீடியோ எடுத்தன’ என்று கூறினால், ஊடகங்கள் எதற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டன? ஊடகங்கள் வந்திருந்தாலும் அவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியிருக்க வேண்டும்.

அமைச்சருக்கு அதற்கான அதிகாரம் இருக்கிறது அல்லவா? அப்படியிருக்கும்போது வகுப்பறைக்குள் ஊடகங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

அந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து, அதை காட்சிப்படுத்தி, அதன்மூலம் கிடைக்கும் கவனத்தை ரசித்ததன் விளைவுதான் இன்று அதையே மறுப்பதற்காக தவியாய் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கீர்த்தனாவுக்கு மட்டுமல்ல, இதுபோன்ற செயல்களைச் செய்ய நினைக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம். அந்த இடத்தில் இருந்த மாணவியை உங்கள் மகளாகவோ, உங்கள் தங்கையாகவோ நினைத்துப் பாருங்கள். அமைச்சர் பதவியில் இருக்கும் யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஊடகத்தினரும் செய்ய மாட்டார்கள்.

ரீல்ஸ் எடுத்து என்ன சாதித்தீர்கள்? ஆங்கிலம் தெரியாதது பெரிய குற்றமா? தமிழ் நன்றாகத் தெரிந்தால் அதைவிட பெருமை எதுவும் இல்லை என்றுதான் நான் சொல்வேன். ரீல்ஸ் மோகத்தில் போய் விழாதீர்கள்.

அமைச்சர்களைப் பார்த்து எம்.எல்.ஏக்கள் இதேபோன்று செய்கிறார்கள். எம்.எல்.ஏக்களைப் பார்த்து எந்த அதிகாரமும் இல்லாத ஒன்றியச் செயலாளர்கள் கூட ஆய்வு செய்ய கிளம்புகிறார்கள். எந்தக் காலத்தில் இதெல்லாம் நடந்தது?

கடந்த ஒரு வாரம் அல்லது பத்து நாட்களாகத்தான் இதுபோன்ற சம்பவங்கள் கொஞ்சம் குறைந்துள்ளன. நல்ல விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுங்கள். அதை யாரும் குறை சொல்லப் போவதில்லை” என்று லட்சுமணன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சிவகாசி அரசுப் பள்ளியில் நடந்த இந்தச் சம்பவம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனின் இந்த விமர்சனம் மேலும் கவனம் பெற்றுள்ளது.

ஒரு மாணவியின் திறனைச் சோதிப்பது தவறா என்பது இங்கு கேள்வி அல்ல. ஆனால், மாணவர்களின் தயக்கம், தடுமாற்றம் அல்லது பலவீனத்தை கேமரா முன்பு பதிவு செய்து பொதுவெளியில் காட்சிப்படுத்துவது எந்த அளவுக்கு சரியானது என்ற கேள்வியே தற்போது வலுவாக எழுந்துள்ளது.

அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் ஆய்வுகள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகளை உருவாக்குவதற்கானதாக மாறிவிடக் கூடாது என்பதே இந்தச் சர்ச்சையின் மையக் கேள்வியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Would you do this if she were your daughter Lakshmanan slams Keerthana


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->