“தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லை” – பாலிவுட் குறித்து மனம் திறந்த சிம்ரன்
There is no respect for South Indian actors Simran opens up about Bollywood
தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சிம்ரன், பாலிவுட் திரைப்படங்களில் நடிக்காததற்கான காரணத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்தி திரைப்பட உலகில் தென்னிந்திய நடிகர்களுக்கும் அவர்களின் சாதனைகளுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்பதால் தான் பல வாய்ப்புகளை நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
1990களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த சிம்ரன், நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், வாலி, ஜோடி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்திலும், டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திலும் நடித்திருந்தார். குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
இந்நிலையில், பாலிவுட் குறித்து அளித்த பேட்டியில் சிம்ரன் கூறியதாவது:“எனக்கு பல முறை இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் நான் ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அங்கிருக்கும் மக்களுடன் என்னால் ஒன்றிப் போக முடியவில்லை. தென்னிந்தியாவில் நாங்கள் செய்த சாதனைகள், இங்கே உள்ள பாரம்பரியம், ரசிகர்களின் அன்பு — இவற்றுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை.”
மேலும் அவர் கூறுகையில்:“நான் வாழ்க்கையின் பெரும்பகுதியை சினிமாவுக்காக கொடுத்திருக்கிறேன். அதற்குப் பிறகும் அடிப்படை மரியாதை கிடைக்கவில்லை என்றால் அது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட தங்குமிடம், பயண வசதி, என்னுடன் வரும் உதவியாளர்கள் எண்ணிக்கை போன்ற அடிப்படை விஷயங்களில்கூட பேரம் பேசுவார்கள்.”
“ஹோட்டல், டிக்கெட் போன்ற வசதிகளிலும் கூட சிக்கனமாக நடந்து கொள்வார்கள். இந்த அணுகுமுறை என்னை மிகவும் பாதித்தது. அதனால் அங்கு வேலை செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு வரவில்லை” என்றும் சிம்ரன் தெரிவித்துள்ளார்.
சிம்ரனின் இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தென்னிந்திய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாலிவுட்டில் போதிய மரியாதை கிடைக்கவில்லை என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
English Summary
There is no respect for South Indian actors Simran opens up about Bollywood