தமிழில் பேச மறுத்த ராஷ்மிகா! இந்தி தெரியாதுனு சொன்ன தனுஷ் - குபேரா பட விழாவில் சலசலப்பு! நடந்தது என்ன?
Rashmika refused to speak in Tamil Dhanush said he didn know Hindi a stir at the Kubera film festival What happened
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சரப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம், வருகிற ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக இருந்தது நாகார்ஜூனாவின் உரை. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் திறமையை புகழ்ந்த அவர், சமீபத்தில் அவருடைய படங்கள் அடைந்த வெற்றிகளை குறித்து உருக்கமாக பேசினார்.
“இந்த பெண் ஒரு திறமைசாலி. கடந்த மூன்றாண்டுகளில் இவருடைய படங்களைப் பாருங்கள், அந்த வசூல் எங்களை எல்லாம் மிஞ்சிவிட்டது. எங்களால் 2000 - 3000 கோடி ரூபாய் வசூல் செய்ய முடியவில்லை. ஆனால் இவரால் முடிந்துள்ளது,” என்று நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா சமீபத்தில் நடித்த ‘அனிமல்’ (ரன்பீர் கபூர்), ‘புஷ்பா 2’ (அல்லு அர்ஜுன்), ‘சாவா’ (விக்கி கௌஷல்) போன்ற படங்கள், பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றிகளை பெற்றதால், தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகை என போற்றப்படுகிறார்.
நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய தருணம், ராஷ்மிகா பேச தொடங்கியபோது ரசிகர்கள் “தமிழில் பேசுங்கள்” எனக் கோரியதாகும். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா,“இந்த இடம் இந்தி மீடியா, தமிழ்ல பேசினா புரியாது போல...,”
என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.
பின் தொடர்ந்த பேச்சில்,“நான் இன்னும் ஆரம்பத்தில்தான் இருக்கிறேன். இந்த நம்பர் ஒன் போட்டி எதற்காக என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் தென்னிந்தியாவிலும் பாலிவுட்டிலும் படங்களை பண்றேன். இன்னும் வளரவேண்டியிருக்கு,”
என்று தனது மனமுவந்த பதிலை வழங்கினார்.
தனுஷ் மேடையில் பேசுவதற்காக வந்ததும், தமிழ் ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தைக் கண்டது. அவர் தமிழில் பேசத் தொடங்கியதும், அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது. பின்னர் ஒரு பத்திரிகையாளர் அவரிடம் இந்தியில் பேசுமாறு கேட்டார். அதற்கு பதிலாக,
“இந்தி பேச வராது… ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் தான் பேசுவேன்,”
என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார்.
இந்த நிகழ்வு முழுவதும் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ‘குபேரா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பது இந்த நிகழ்ச்சியின் வெற்றியால் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rashmika refused to speak in Tamil Dhanush said he didn know Hindi a stir at the Kubera film festival What happened