தெலுங்கு பட புரோமோஷனில் நயன்தாரா! தமிழ் படம்னா தக்காளி தொக்கா? நயன்தாராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Nayanthara in Telugu film promotion Will the Tamil film be a hit Netizens are roasting Nayanthara
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென உறுதியான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நயன்தாரா, நடிப்பில் மட்டுமல்லாமல் தனது தனித்துவமான செயல்பாடுகளாலும் எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான மன சங்கர வரபிரசாத் கரு வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் வெளியாகும் முன்பாக நடைபெற்று வரும் புரோமோஷன் நிகழ்வுகளில் நயன்தாரா பங்கேற்றிருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு காரணம், இதுவரை நயன்தாரா தான் நடித்த படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதையே ஒரு விதிமுறையாக பின்பற்றி வந்தார். படம் வெளியான நேரங்களில் பேட்டிகள் அளிப்பது, ரசிகர்களை நேரில் சந்தித்து விளம்பரம் செய்வது போன்ற செயல்களில் அவர் ஈடுபடாமல், “படமே தான் பேச வேண்டும்” என்ற நிலைப்பாட்டில் இருந்தார். இதனால் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரது இந்த முடிவை ஏற்றுக்கொண்டே வந்தனர்.
ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல, மன சங்கர வரபிரசாத் கரு படத்தின் புரோமோஷனில் நயன்தாரா நேரடியாக பங்கேற்றுள்ளார். குறிப்பாக, இந்த படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடியுடன் இணைந்து அவர் நடித்துள்ள புரோமோஷன் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு ரசிகர்கள் இதனை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
குறிப்பாக சிரஞ்சீவி ரசிகர்கள், நயன்தாரா படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து புரோமோஷனில் கலந்துகொண்டதை பாராட்டி வருகின்றனர். ஆனால் இதே விஷயம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது. “தெலுங்கு படம் என்றால் புரோமோஷனில் கலந்து கொள்கிறீர்கள்; தமிழ் படங்களுக்கு ஏன் வரவில்லை?” என்றும், “தமிழ் சினிமாவை நீங்கள் குறைவாக நினைக்கிறீர்களா?” என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், இன்னொரு தரப்பு ரசிகர்கள் இந்த விவகாரத்தை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். இதுவரை புரோமோஷன்களில் கலந்துகொள்ளாமல் இருந்த நயன்தாரா, இனி வரும் காலங்களில் தனது முடிவை மாற்றி, பட விளம்பரங்களில் பங்கேற்க முடிவெடுத்திருக்கலாம் என்றும், அந்த மாற்றத்தின் தொடக்கமாக இந்த படம் இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், எதிர்காலத்தில் அவர் தமிழ் படங்களின் புரோமோஷன்களிலும் பங்கேற்பாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
English Summary
Nayanthara in Telugu film promotion Will the Tamil film be a hit Netizens are roasting Nayanthara