‘என் நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல’ – சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
My intention is not to hurt anyone AR Rahman clarifies the controversy
ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் என உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர். ரஹ்மான். தேசிய, சர்வதேச அளவில் எண்ணற்ற விருதுகளை குவித்துள்ள அவர், சமீப காலமாகவும் தொடர்ந்து பல்வேறு முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடைசியாக தமிழில் தக் லைஃப், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்த ரஹ்மான், தற்போது ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம் திரைப்படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் அளித்த ஒரு பேட்டியைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து, தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் உச்சத்தை எட்டியது. தொடர்ந்து பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்து, அங்கும் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். பின்னர் ஹாலிவுட் வரை சென்று, ஸ்லம் டாக் மில்லியனர் போன்ற படங்கள் மூலம் ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட உலகின் உயரிய விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் சமூக பண்பாடு, கலாசாரம் குறித்து ரஹ்மான் பேசியிருந்தார். அதில், விக்கி கௌஷல் நடித்த சாவா திரைப்படம் குறித்து, “அது பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது” என அவர் கூறிய கருத்து, வட மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் ரஹ்மானை கடுமையாக விமர்சித்தனர்.
விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது விளக்கத்தை அளித்துள்ளார். அந்த வீடியோவில் அவர்,“அன்புள்ள நண்பர்களே, வணக்கம். இசை என்பது கலாசாரங்களுடன் இணைவதற்கும், அவற்றை கொண்டாடவும், மரியாதை செலுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு வழி. இந்தியா எப்போதும் எனது வீடு, எனது ஆசிரியர், எனக்கு உந்துகோலாக இருக்கிறது. சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே எப்போதும் எனது எண்ணம். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு ஒருபோதும் இல்லை. என் எண்ணம் சரியாக புரிந்துகொள்ளப்படும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஹ்மானின் இந்த விளக்க வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது விவாதம் மேலும் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
English Summary
My intention is not to hurt anyone AR Rahman clarifies the controversy