“என் குழந்தைகள் நான் நடித்த படங்களை இன்னும் பார்க்கவே இல்லை” – விருது விழாவில் ஷாலினி ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை ஷாலினி, திருமணத்திற்குப் பிறகு முழுமையாக சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதுவரை சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் பங்கேற்காமல் இருந்த ஷாலினி, பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

குழந்தை நட்சத்திரமாக ‘ராஜா சின்ன ரோஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஷாலினி, பின்னர் ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘அலைபாயுதே’, ‘அமர்க்களம்’ போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். குறிப்பாக ‘அலைபாயுதே’ படத்தில் அவரது நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது. கிளாமர் இல்லாமல் நடிப்பால் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்த நடிகைகளில் ஷாலினியும் ஒருவர் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

‘அமர்க்களம்’ படப்பிடிப்பின்போது அஜித்துடன் காதல் மலர்ந்தது. இரு குடும்பங்களின் சம்மதத்துடன் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி, குடும்பம் மற்றும் குழந்தைகள் வளர்ப்பில் முழு நேரம் செலுத்தினார். அஜித்தின் வாழ்க்கையிலும், குறிப்பாக அவரது ரேசிங் ஆர்வத்திலும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் விருது விழாவில் பேசிய ஷாலினி, “என் குழந்தைகள் இதுவரை நான் நடித்த எந்தப் படத்தையும் பார்த்தது இல்லை. ஒவ்வொரு முறையும் பார்க்கலாம் என்று சொன்னால் ‘அம்மா அப்புறம் பார்க்கலாம்’ என்று தள்ளிவிடுவார்கள். சமீபத்தில் என் மகள் ‘அலைபாயுதே’ படம் பற்றி தனது தோழி கூறியதாகச் சொல்லி அதை பார்க்க வேண்டும் என்றார். ஆனால் இன்னும் பார்க்கவில்லை,” என்று சிரித்தபடி பகிர்ந்துகொண்டார்.

மேலும், “இந்த நிகழ்ச்சிக்கு வரும்போதும் மகனிடம் சொன்னேன். ‘அமர்க்களம்’ படத்தில்தான் நான் உங்கள் அப்பாவை சந்தித்தேன் என்று சொல்லியும் பார்த்தேன். ஆனாலும் அதையும் அப்புறம் பார்க்கலாம் என்றுதான் கூறிவிட்டார்கள்,” என்றார்.

அஜித் குறித்து பேசும்போது, “அஜித் இப்போது துபாயில் ரேஸில் இருக்கிறார். எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. அவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள்,” என்று தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பொதுவெளியில் உரையாற்றிய ஷாலினியின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்தையும், அஜித்தின் ரேசிங் கனவையும் முதன்மையாகக் கருதும் அவரது எளிமையான அணுகுமுறை மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

My children have never seen the films I have acted in Shalini opens up at the awards ceremony


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->