ஜனநாயகன் – பராசக்தி: ரிலீஸுக்கு முன்பே ஆடியோ லான்ச் டிஆர்பியில் வெடிக்கும் போட்டி!விஜய்க்கு எதிராக களத்தில் குதித்த கலாநிதி மாறன்?
Janyayan Parasakthi An explosive competition in the audio launch TRP even before the release Kalanithi Maran jumping into the fray against Vijay
நடிகர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. ரிலீஸ் தேதிகளில் ஒரு நாள் இடைவெளியில் வெளிவரும் இந்த இரண்டு பெரிய படங்களுக்கிடையேயான போட்டி, தற்போது இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பிலேயே ஆரம்பித்துவிட்டதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன், நடிகர் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விஜய் ரசிகர்கள் இப்படத்தை திருவிழாவாக கொண்டாட தயாராகி வரும் நிலையில், சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா அதற்கான முன்னோட்டமாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் 80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் படத்தின் கிரேஸ் மற்றும் மார்க்கெட் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் ப்ரீ-பிஸ்னஸ் வியாபாரம் சிறப்பாக முடிந்துள்ளதாகவும், ரிலீஸுக்குப் பிறகு வசூலில் பெரிய சாதனை நிகழும் என்றும் விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த வசூல் பயணத்திற்கு சவாலாக பராசக்தி படம் அமையக்கூடும் என்ற கணிப்புகளும் வெளியாகியுள்ளன.
முதலில் பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் திடீரென அந்த தேதி மாற்றப்பட்டு, ஜனநாயகன் ரிலீஸுக்கு முன்பாகவே ஜனவரி 10ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் மெகா வெற்றி அவரது மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று திரைத்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்ற தகவல் பரவிய நிலையில், அந்த செய்தியை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், ஜனநாயகனுடன் நேரடி போட்டிக்கு செல்லும் முடிவை சிவகார்த்திகேயன் எடுத்தார் என்ற தகவல்களையும் தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.
இந்நிலையில் ரசிகர்களிடையே புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியாக இருந்து, அது ஜனவரி 4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ZEE நிறுவனத்தின் Z5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. அதே நாளில், பராசக்தி படத்தின் ஆடியோ லான்ச் சன் டிவியில் மாலை 3 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்த நேர ஒத்திசைவு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “ரிலீஸில்தான் போட்டி என்று நினைத்தால், ஆடியோ லான்ச் டிஆர்பியிலேயே போட்டியை ஆரம்பித்துவிட்டார்கள். விஜய் தொடர்பான நிகழ்ச்சிக்கு எதிராகவே இந்த நேரத்தில் சன் டிவி ஒளிபரப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் இருக்கலாம்” என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளன.
இதனால், ரசிகர்கள் பார்வையில் ஜனநாயகன் Vs பராசக்தி போட்டி, பட வெளியீட்டுக்கு முன்பே சூடு பிடித்துள்ளதாகவும், இந்த மோதல் வசூல் மட்டுமல்லாது டிஆர்பி மற்றும் ரசிகர் ஆதரவு அளவிலும் தீவிரமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Janyayan Parasakthi An explosive competition in the audio launch TRP even before the release Kalanithi Maran jumping into the fray against Vijay