ஜமா பாரி இளவழகனின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம்: ரோஜா செல்வமணி முக்கிய வேடம்? ஹீரோயின் யாருதெரியுமா?
Jama Pari Ilavalagan next film starts with a pooja Roja Selvamani will play the lead role Who will be the heroine
ஜமா திரைப்படத்தை இயக்கி, அதில் நடித்தும் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒரே நேரத்தில் கவர்ந்த பாரி இளவழகன், தனது அடுத்த படத்தின் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.
2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் காலடி எடுத்துவைத்த பாரி இளவழகன், குறுகிய காலத்திலேயே அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். பாட்டில் ராதா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், ஜமா படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரையை பதித்தார். குறிப்பாக தெருக்கூத்து கலைஞராக அவர் நடித்த விதமும், படத்தின் நேர்த்தியான இயக்கமும் பாராட்டுகளை குவித்தது.
இந்நிலையில், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படம், அந்த நிறுவனத்தின் 7வது தயாரிப்பு படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் பாரி இளவழகன் மீண்டும் இயக்குநராகவும், நாயகனாகவும் நடிக்க உள்ளார். படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பாரி இளவழகனுக்கு ஜோடியாக இளம் நடிகை ரம்யா ரங்கநாதன் இணைந்துள்ளார். இவரை பார்த்ததும் “எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே” என ரசிகர்கள் யோசித்த நிலையில், கடந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடலில் பிரியங்கா மோகனனையே ஓவர்டேக் செய்து ஆட்டம் போட்ட அதே ரம்யா ரங்கநாதன் தான் என்பதும் தெரியவந்தது. இதனை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், இந்த படத்தில் நடிகை ரோஜா செல்வமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவலன் படத்தில் விஜய்க்கு மாமியாராகவும், அசினுக்கு அம்மாவாகவும் நடித்த ரோஜா செல்வமணி, விஜயின் ஆலோசனைப்படி சினிமாவில் இருந்து சற்றே விலகியிருந்த நிலையில், இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பப்போவதாக கூறப்படுகிறது.
ஜமா படத்தை போல இது ஒரு எக்ஸ்பீரிமெண்ட் படமாக இருக்குமா? அல்லது குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற ஃபீல்-குட் படமாக உருவாகுமா என்பது அடுத்தடுத்த அப்டேட்களில் தெரியவரும். எப்படியிருந்தாலும், 2026ஆம் ஆண்டு பாரி இளவழகனுக்கு ஒரு வெற்றியாண்டாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
Jama Pari Ilavalagan next film starts with a pooja Roja Selvamani will play the lead role Who will be the heroine