தூர்தர்ஷனில் ராமாயணம் ஒளிபரப்ப கடுமையான எதிர்ப்பு! வீரமணியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!  - Seithipunal
Seithipunal


கரோனாவை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவே அரசுக்குச் சார்பாகக் குரல் கொடுக்கும் ஒரு காலகட்டத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயண ஒளிபரப்பா? மத்திய அரசின் இந்த மதவாதப் போக்கைக் கைவிடவேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் முழு அடைப்பு உள்ள நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இன்றுமுதல் அரசு தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) இராமாயண தொடர் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக் குலைக்கலாமா?

கரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், முற்றிலுமாக ஒழித்துக் கட்டவும் மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு கட்சிகளுக்கும், மதங்களுக்கும் அப்பாற்பட்ட முறையில் பொதுமக்கள், தலைவர்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், மத்திய அரசு - அரசுத் தொலைக்காட்சியில் இராமாயணத்தை மீண்டும் ஒளிபரப்புவது தேவையற்ற ஒன்று. மத்திய அரசின் இந்து மதக் கண்ணோட்ட இத்தகைய நடவடிக்கைகள்மீது கடும் விமர்சனங்கள் வெடித்து எழும் ஒரு நிலையை ஏற்படுத்துவது நல்லதல்ல - உகந்ததல்ல!

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே!

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தை மய்யப்படுத்துவது என்று வரலாற்று ஆசிரியர்கள் - இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்த விவேகானந்தர் போன்றவர்கள் சொல்லியிருப்பது உலகம் அறிந்த ஒன்றே!

அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு இதிகாசத்தை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது சட்டப்படியும் குற்றமேயாகும்.

பார்ப்பனீயத் தந்திரம்!

அதுவும் நாட்டு மக்கள் ஒருமித்த நிலையில் கரோனா அச்சத்தின் பிடியில் சிக்குண்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு சூழ்நிலையில், இதுதான் தக்க சந்தர்ப்பம் என்று கருதி அவர்களிடத்தில் ஓர் இந்து மத இதிகாசத்தைத் திணிப்பது என்பது - ஒரு வகைப் பார்ப்பனீயத் தந்திரமே!

சம்பூகவதையின் தத்துவம் என்ன?

இராமன் அவதாரம் என்பது வருண தருமத்தைக் காப்பாற்றுவதற்குத்தானே - தவம் செய்த சம்பூகன் சூத்திரன் என்ற ஒரே காரணத்துக்காக, இராமன் சூத்திர சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றது எதைக் காட்டுகிறது?

சூத்திரன் தவம் செய்ய அருகதையுள்ளவன் அல்லன் என்று இராமன் கூறியதன் தாத்பரியம் என்ன? இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், கிடந்தது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல, இராமாயணத்தை அவசர அவசரமாக ஒளிபரப்புவது - இந்துத்துவாவின் கொள்கைப் பரப்புதல் என்பதல்லாமல் வேறு என்ன?

சந்தேகப்பட்ட மனைவி சீதையை, இராமன் நெருப்பில் இறங்கச் சொன்னதும், கருவூற்ற சீதையை கர்ப்பிணியான நிலையில், காட்டுக்கு அனுப்பியதும், பெண்ணினம் ஏற்கக்கூடிய பாலின நீதியா? இவற்றை அரசு தொலைக்காட்சிகளிலே நியாயப்படுத்தி வெளியிடலாமா?

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அஜெண்டா!

ஒரு பக்கத்தில் இராமன் கோவில் கட்டும் பணி தீவிரம் - இன்னொரு பக்கத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயண ஒளிரப்பு என்றால், இது ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அஜெண்டாதானே!

இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவேண்டுமா? களம் காண வேண்டுமா? மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு உரத்தக் குரல் கொடுக்க வேண்டுமா?

எல்லோரும் ஒன்றிணைந்து கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், அதனைச் சிதற அடிக்கும் வகையில், மக்கள் வேறு பக்கம் நின்று அரசை எதிர்க்கும் நிலையை உருவாக்குவது மத்திய அரசுக்கு நல்லதல்ல! இதற்கான முழு பொறுப்பை மத்திய பா.ஜ.க. அரசே ஏற்கவேண்டி வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தூர்தர்ஷனில் இராமாயண ஒளிபரப்புதல் என்ற முடிவை உடனே மத்திய பி.ஜே.பி. அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இராமாயண ஒளிபரப்பைக் கைவிடவேண்டும்! ஒன்றுபட்ட மக்களின் ஒற்றுமைச் சிந்தனையை வேறுபக்கம் திருப்பும் ஒரு விஷமத்தைச் செய்யவேண்டாம் என்பது எங்களின் பொறுப்பான வேண்டுகோளாகும்!" என தெரிவித்துள்ளார். 

இதற்கு இணையதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. திமுகவை சார்ந்தவர்களின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான போது வீரமணி எங்கே மறைந்திருந்தார் என கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dravidar kazhagam veeramani oppose telecast Ramayana in DD1


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->