இயக்குனர் கே.பாக்யராஜ் உடன் படித்த பிரபல இயக்குனர்..! பாக்யராஜ் வெளியிட்ட ருசிகர தகவல்.! - Seithipunal
Seithipunal


‘’நானும் ஆர்.சுந்தர்ராஜனும் ஒண்ணாவதில் இருந்து அஞ்சாவது வரை ஒண்ணாப் படிச்சோம்’’ என்று இயக்குநர் கே.பாக்யராஜ் பேட்டியளித்தார்.

தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் இயக்கிய முதல் படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. 1979ம் ஆண்டு வெளியானது. இந்த வருடம், பாக்யராஜ் இயக்குநராகி 40 ஆண்டுகளாகி விட்டது.

இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் கே.பாக்யராஜ், ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பிரத்யேக வீடியோ பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

நானும் ஆர்.சுந்தர்ராஜனும் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை, ஒன்றாக தான் படித்தோம். அதன் பிறகு இருவரும் வேறுவேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டோம். பின்னர், நான் காலேஜ் சென்று பியுசி படித்து முடித்த காலகட்டத்தில், எங்கள் ஏரியாவில் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருப்பேன்.

அந்த மன்றத்துக்கு ஒருநாள், கையில் பெரிய ஃபைலுடன் ஆர்.சுந்தர்ராஜன் வந்தார். அவரை எனக்கு அடையாளமே தெரியவில்லை. அதேபோல, அவருக்கும் என்னைத் தெரியவில்லை. இருவரும் உற்றுப் பார்த்துக்கொண்டு, ஒருவரையொருவர் தெரிந்துகொண்டோம்.

‘நீ இங்கே டிராமாவெல்லாம் போடுகிறாய்’ என கேள்விப்பட்டேன். நானும் டிராமா எழுதிவைத்திருக்கிறேன்’ என்று ஆர்.சுந்தர்ராஜன் சொன்னார். ‘நான் நடித்தால் எங்கள் வீட்டில் பெல்ட்டைக் கழற்றி அடிப்பார்கள்’ என்று நான் சொன்னேன். ‘வேண்டுமென்றால், டிராமாவுக்கு எழுதித் தருகிறேன்’ என்று சொன்னேன். பிறகு இருவரும் சேர்ந்து டிராமாவெல்லாம் போட்டோம்.

ஆர்.சுந்தர்ராஜன் நன்றாகப் பாடுவார். விடியவிடியப் பேசிக்கொண்டிருப்போம். டிராமாவில் உள்ள கதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, ‘வெகுதூரம் நீ ஓடிச் சென்றாலும்’ என்று பாட ஆரம்பித்துவிடுவார்.

அப்புறம், ஆர்.சுந்தர்ராஜன் சென்னைக்கு சினிமாவில் சேருவதற்காக வந்தார். அப்போது எனக்கு உடல்நலமில்லை. அதனால் நான் சென்னைக்கு வரவில்லை. அவரும் சிலகாலம் இருந்துவிட்டு, பிறகு வந்துவிட்டார். அதையடுத்து நான் சென்னைக்கு வந்தேன். எங்கள் டைரக்டரிடம் (பாரதிராஜா) சேர்ந்தேன்.

பிறகு, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் போது வந்து பார்த்தார். அப்புறம் ‘புதிய வார்ப்புகள்’ வந்தது. நான் படம் பண்ணும் வேலையில் இறங்கினேன். இதையடுத்து மீண்டும் சென்னைக்கு வந்தார். என்னிடம் சேரச்சொன்னேன். ஒன்றாகப் படித்ததால், என்னிடம் சேருவதற்கு ஏனோ சங்கோஜப்பட்டார்.

பிறகு அவரும் இயக்குநரானார். மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தந்தார். இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Bakiyaraj interview


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal