தங்கம் விலை ‘கிடுகிடு’ ஏற்றம்…! சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி புதிய உச்சம்...!
Gold prices rising quickly Sovereign nears 1 lakh hits new high
தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத வேகத்தில் விண்ணைத் தொடும் நிலையில் உயர்ந்து வருகிறது. இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக, அமெரிக்க மத்திய பெடரல் வங்கி (Federal Reserve) வட்டி விகிதத்தை குறைத்ததையே பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுவாக, வட்டி விகிதம் குறைக்கப்படும் போது, முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதை குறைத்து, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இதன் விளைவாக, தங்கத்தில் முதலீடு அதிகரித்து, அதன் விலை தொடர்ந்து ஏறிவருவதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் 17-ம் தேதி, ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு, அப்போது அது புதிய உச்சமாக பதிவானது. அந்த நேரத்தில், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எப்போது தாண்டும்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்தது. ஆனால் அதன் பின்னர் தங்கம் விலையில் சிறிதளவு சரிவு ஏற்பட்டது.அந்த சரிவின் தொடர்ச்சியாக, கடந்த மாதம் நவம்பர் 5-ம் தேதி, ஒரு சவரன் தங்கம் ரூ.89,440 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இதனால், “இனி தங்கம் விலை குறைந்தே போகுமா?” என மக்கள் நிம்மதியாக நினைத்த வேளையில், மீண்டும் விலை உயர்வு தொடங்கியது.
இம்மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பழையபடி ‘கிடுகிடு’வென ஏற்றம் கண்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இம்மாத ஆரம்பத்திலேயே ரூ.96 ஆயிரத்தை தாண்டி, அதற்கு கீழ் இறங்காமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த 12-ம் தேதி, தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு,
ஒரு கிராம் ரூ.12,370-க்கும்,
ஒரு சவரன் ரூ.98,960-க்கும்
விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக விலை மாற்றமின்றி நிலைத்திருந்தது.இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடி பாய்ச்சலை காட்டி, ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி, வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம்,
சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.99,680-க்கு
கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ரூ.12,460-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மட்டுமின்றி, வெள்ளி விலையும் அதே வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி விலை,
கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ரூ.213-க்கு,
கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்திற்கு
விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
English Summary
Gold prices rising quickly Sovereign nears 1 lakh hits new high