அமேசானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் விதித்த அதிரடி அபராதம்: மாற்றி வந்த கேமிராவும் மறுக்கப்பட்ட பணமும்
Consumer Court Slaps Massive Fine on Amazon for Delivering Wrong Product and Denying Refund
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நடக்கும் குளறுபடிகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் தொடர்ந்து சாட்டையடி தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருளை விநியோகித்து, அதற்கான தொகையையும் திருப்பித் தர மறுத்த இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுக்கும் அதன் விற்பனையாளருக்கும் நுகர்வோர் நீதிமன்றம் 4.68 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த சாலமன் லெப்சா என்பவர், கடந்த பிப்ரவரி 2025-ல் அமேசான் தளத்தின் வழியே 1.43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமிரா ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு முற்றிலும் மாறுபட்ட வேறொரு மாடல் கேமிராவே டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அவர் நாடியபோது, பொருளைத் திருப்பி அனுப்பினால் பணம் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி அவர் பொருளைத் திருப்பி அனுப்பியபோதும், தவறான அல்லது சேதமடைந்த பொருளைத் திருப்பி அனுப்பியதாகக் கூறி அமேசான் தரப்பு பணத்தைத் தர மறுத்து இழுத்தடித்தது.
தொடர் மின்னஞ்சல் போராட்டங்கள் தோல்வியடைந்ததால் சாலமன் டார்ஜிலிங் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையின் போது, தாங்கள் ஒரு இடைத்தரகர் மட்டுமே என்று கூறி அமேசான் நிறுவனம் தப்பிக்க முயன்றது. எனினும், தயாரிப்புகள் பட்டியலிடப்படுவது முதல் பணம் செலுத்துதல், டெலிவரி மற்றும் ரிட்டர்ன் வரை அனைத்துமே அமேசானின் முழு கட்டுப்பாட்டில் நடப்பதால் அவர்கள் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்று வாடிக்கையாளர் தரப்பில் வாதிடப்பட்டது.
அமேசான் மற்றும் விற்பனையாளர் தரப்பில் முறையான விளக்கங்களோ சாட்சியங்களோ அளிக்கப்படாததால், இச்செயல் தீவிர சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றம் விதித்த இழப்பீட்டு விவரங்கள்:
கேமிராவின் அசல் விலை: 1.43 லட்சம் ரூபாய்
மன உளைச்சலுக்கான இழப்பீடு: 2 லட்சம் ரூபாய்
அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு: 1 லட்சம் ரூபாய்
வழக்குச் செலவுகள்: 25,000 ரூபாய்
இந்த மொத்த தொகையான 4.68 லட்சம் ரூபாயை அடுத்த 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்குத் தொடரப்பட்ட நாள் முதல் முழுத்தொகையும் கைகளில் கிடைக்கும் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டித் தொகையையும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்ற நினைக்கும் நிறுவனங்களுக்கு இத்தீர்ப்பு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
English Summary
Consumer Court Slaps Massive Fine on Amazon for Delivering Wrong Product and Denying Refund