சோழப்பேரரசனையே வெற்றி கொண்டு சிறையில் அடைத்த குறுநில மன்னன் : வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட மாவீரன்..,
ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன், காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அந்த வழியில் வந்தவர் தான் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன்.
வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது.
இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.
பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார்.
அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தார் . சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் இந்த கோப்பெருஞ்சிங்கன்.
தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார், அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், இவர் பல கோவில்களை கட்டியதும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதும் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு .
அவற்றில் சில:
தமிழ்நாடு காத்த பெருமான், பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன்,
கர்ணாடலஷிமீலுண்டாகன், அழகிய சீயன், அழகிய பல்லவன், பல்லவ குல பாரிஜாதம் , காடவ குல திலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன்.
தொண்டைமண்டலம் முழுவதும் மற்றும் சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
இவ்வளவு வரலாற்று சான்றுகள் இருந்தும் இந்த மன்னன் எந்த ஒரு வரலாற்று ஆய்வாளர்களாலும் முன்னிலை படுத்தப்படாமல் இருப்பதற்கு என்ன கரணம் என்று தெரியவில்லை.