கடுமையான வெப்ப அலை; 'ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருக்கிறது'; WHO எச்சரிக்கை..!
WHO warns of more deadly weeks ahead for Europe due to another severe heatwave
கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசிவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் கடுமையான வெப்ப அலை உருவாகி வருவதால் ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், 41 நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார். அதன்படி, சமீபத்திய வெப்ப அலைகளில் இருந்து பெற்ற படிப்பினை மற்றும் எதிர்கால தயாரிப்புகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக்கு அடுத்து, ஹன்ஸ் க்ளூஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''அட்லாண்டிக் பெருங்கடலில் மற்றொரு கடுமையான வெப்ப அலை உருவாகி வருவதால், ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருக்கின்றன. போர்ச்சுகல் மற்றும் தெற்று ஸ்பெயினில் வெப்பநிலை வரும் நாட்களில் 43 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பம் சார்ந்த சுகாதார செயல்திட்டங்களை வகுத்திருந்த நாடுகள், கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட வெப்ப அலையின்போது மிக விரைவாக தங்கள் மக்களை பாதுகாத்தன. அதேநேரத்தில், உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கும் குறைவான நாடுகளே அத்தகைய செயல்திட்டங்களை கொண்டிருந்தன.
ஜூன் 20 முதல் 28 வரை நிலவிய வெப்ப அலை ஐரோப்பாவில் பதிவான மிகக் கடுமையான வெப்ப அலை என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

காலநிலை மாற்றம் காரணமாகவே தீவிர வெப்ப அலை உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் 3,700-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை என்றும் இது உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெப்ப அலையின்போது ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியது. முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், வீடற்றவர்கள், சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்கள் ஆகியோருக்கான உதிகள் இன்னும் சரியாகச் சென்றடையவில்லை.
அடுத்த வெப்ப அலைக்கு முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரி செய்ய வேண்டும். வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான சுகாதார அமைப்புகளை உருவாக்க வேண்டும்'' என்று ஹன்ஸ் க்ளூஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
WHO warns of more deadly weeks ahead for Europe due to another severe heatwave