இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக ட்ரம்பின் விசுவாசியான செர்ஜியோ கோர் நியமனம்..!
Trump loyalist Sergio Gore appointed as US ambassador to India
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக, அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பிக்கைக்கு உரியவரும், வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரியுமான செர்ஜியோ கோரை நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்பின் ஆதரவாளராக அறியப்படும் செர்ஜியோ கோர், வெள்ளை மாளிகையில் அதிபரின் முக்கியப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.
ட்ரம்பின் 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற கொள்கைக்கு ஆதரவாக நாடு முழுவதும் சுமார் 4,000 அதிகாரிகளை நியமித்து சாதனை படைத்தவர் என்று பாராட்டை பெற்றவர். அத்துடன், டிரம்பின் அதிபர் தேர்தல் பிரசாரங்களில் முக்கியப் பங்காற்றியதோடு, அவருடைய புத்தகங்களை வெளியிட்டமை, டிரம்புக்கு ஆதரவான மிகப்பெரிய சூப்பர் பிஏசி-யை நடத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்ட்டார். இதன் மூலம், டொனால்ட் டிரம்பின் முழு நம்பிக்கையைப் பெற்றவராக செர்ஜியோ கோர் உள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பில் இந்தியா- அமெரிக்கா இடையே, உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, வரும் 27-ஆம் தேதி முதல் இந்திய இறக்குமதிகள் மீது 50% வரியை டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது. இதில் 25% வரி, ரஷ்யா உடனான எண்ணெய் வர்த்தகத்திற்காக அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரை நியமிப்பதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.

இந்நிலையில், செர்ஜியோ கோரின் விசுவாசம் மற்றும் செயல்திறனைப் பாராட்டிய டிரம்ப், 'உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியத்தில், எனது செயல்திட்டத்தை நிறைவேற்றவும், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றவும் எனது நம்பிக்கைக்குரிய ஒருவர் இருப்பது முக்கியம்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, செர்ஜியோ கோர்,செனட் சபையால் உறுதி செய்யப்படும் வரை அவர், தற்போதைய வெள்ளை மாளிகைப் பணிகளைத் தொடர்வார் என்று கூறப்படுகிறது. ஆனால், இவரின் புதிய நியமனம், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் வேகமாக மாறிவரும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் மீது டிரம்ப் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டை இறுக்க விரும்புவதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
English Summary
Trump loyalist Sergio Gore appointed as US ambassador to India