ரஷ்யாவுக்கு வர்த்தக ரீதியில் உதவிய 03 இந்திய நிறுவனங்கள் உள்பட 45 நிறுவனங்களுக்கு பொருளாதார தடை..!
Three Indian companies banned for providing commercial assistance to Russia
உக்ரைன் மீது ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. போரினால் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த போரை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் தரும் வகையில், ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கிடையே, ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியில் உதவும் நிறுவனங்கள் மீதும் இத்தடையை இந்த அமைப்பு நீட்டித்துள்ளது.
அதன்படி, ரஷ்ய ராணுவத்தின் இயந்திர கருவிகள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுத அமைப்பிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் வகையில், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இதையடுத்து, அந்நிறுவனங்களை கண்டறிந்து, அதன்மீதும் ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், 45 நிறுவனங்களுக்கு தடை விதித்து, ஐரோப்பிய யூனியன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த, 'ஏரோட்ரஸ்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், அசென்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ என்டர்பிரைசஸ்' ஆகிய மூன்று நிறுவனங்களும் அடங்குகிறது. இதுதவிர, இப்பட்டியலில் சீனாவை சேர்ந்த, 12 நிறுவனங்கள், தாய்லாந்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன.
ஆனால், இந்நிறுவனங்கள், ரஷ்யாவுடன் எத்தகைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது குறித்து விபரங்களை ஐரோப்பிய யூனியன் அமைப்பு இதுவரை வெளியிடவில்லை. இதேபோல், இந்நடவடிக்கை பற்றி மத்திய அரசும் தன் கருத்தை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Three Indian companies banned for providing commercial assistance to Russia