'ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை'; ஐ.நா. அறிக்கை..!
The UN report states that justice has not yet been served for the sexual crimes committed against the Eelam Tamils
சுமார் 30 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த உள்நாட்டு போரின்போது ஈழத்தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, ''நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் - நீதிக்கான நம்பிக்கையை கூட''என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இலங்கை போரில் நிகழ்ந்த வன்முறைகள், பாலியல் துன்புறுதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

குறித்த போரின்போது, பாலியல் வன்முறை சம்பவங்கள் பரவலாக நிகழ்ந்துள்ளது என்றும், போரால் பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டுவதற்கும், தண்டிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையினர் பாலியல் வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வன்முறை செயல்கள் பெரும்பாலும் ஈழத்தமிழ் பெண்கள் மற்றும் விடுதலைப் புலிகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்கால குற்றங்களுக்கு எந்த இழப்பீடும், பொறுப்பு கூறலும் இல்லாமல் இருப்பது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

ஈழ போரில் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து நாள்பட்ட உடல் காயங்கள், குழந்தையின்மை, மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுவதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு, சுமார் 17 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு படைகள் மற்றும் பிறரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை இலங்கை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும், முறையான மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அத்துடன், போரால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்றும், ஒரு சுயாதீனமான சட்ட அலுவலகத்தை நிறுவ வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவியல் மற்றும் சமூக ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா.வின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
The UN report states that justice has not yet been served for the sexual crimes committed against the Eelam Tamils