ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் உக்ரைன் உருவாக்கிய சைரனா ட்ரோன்..!
The Siren drone developed by Ukraine to put an end to Russian dominance
நேட்டோ கூட்டணியில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா, , உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இரு நாடுகளுக்கு இடையேயான போர் 04 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது.
இந்தப் போரில் எஃப்.பி.வி (FPV) ட்ரோன்கள் போர்க்களத்தின் விதிகளை தலைகீழாக மாற்றியுள்ளன. அதாவது வெறும் 500 டாலர் செலவில் தயாராகும் இந்த சிறிய ட்ரோன்கள், பல லட்சம் டாலர் மதிப்புள்ள பீரங்கிகள், டாங்கிகளை துல்லியமாக அழிக்கின்றன.
ஒரு காலக்கட்டத்தில் உளவு பார்க்க மட்டுமே பயன்பட்ட இந்த பறக்கும் சிறிய ட்ரோன் கருவிகள், இன்று போர்க்களத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் முதன்மை ஆயுதமாக மாறியுள்ளன.

இந்த சூழலில் குறித்த ட்ரோன்களை வீழ்த்த ரேடியோ அலைவரிசைகளை முடக்கும் 'எலக்ட்ரானிக் வார்ஃபேர்' ஜாமர்களை நாடுகள் பயன்படுத்தத் தொடங்கின. இதில் சிக்னல் உடைந்தால் ட்ரோன்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். இதையும் முறியடிக்க, இப்போது ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளன.
கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் உக்ரைன் இறங்கியுள்ளது. அதன்படி, உக்ரைன் பாதுகாப்பு நிறுவனம் ஒரு அதிநவீன கடல் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இதனை, பாரிஸில் நடைபெற்ற புகழ்பெற்ற 'யுரோசடோரி' சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிரைமரன் வடிவ ட்ரோனுக்கு 'SIRENA' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது கடற்பரப்பில் பயணித்தபடி, வான்வெளியில் பறக்கும் ரஷ்ய போர் விமானங்களைக் கண்டறிந்து துல்லியமாகச் சுட்டு வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன கடல் ட்ரோன், எதிரி விமானங்களின் தகவல் தொடர்புகள் மற்றும் செயற்கைக்கோள் வழித்தட (GNSS) சிக்னல்களை சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒட்டுமொத்தமாக முடக்கும் மல்டி-பேண்ட் ஜாமிங் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அத்துடன், இது ரஷ்யாவின் காமிகேஸ் ரக ட்ரோன்களின் ஆட்டோபைலட் அமைப்பைக் குலைத்து, அவற்றை வழிதவறச் செய்யும் வல்லமை பெற்றுள்ளது.
மணிக்கு 90 கிமீ வேகத்தில் பாயும் இந்த சைரனா ட்ரோன், சுமார் 300 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் அல்லது ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது முழுமையாக தன்னிச்சையாகவும், ரிமோட் கண்ட்ரோலிலும் இயங்கும் வகையில், தொடர்ந்து 24 மணி நேரம் வரை கடலில் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் பணிகளில் ஈடுபடக்கூடிய வல்லமை பெற்றது. கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 800 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கக்கூடிய இந்தத் தொழில்நுட்பம், கருங்கடலில் ரஷ்ய விமானப்படைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும் என ராணுவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
English Summary
The Siren drone developed by Ukraine to put an end to Russian dominance