பயங்கரவாதிகள் மோதல் ; 30 பேர் பலி!
Terrorists clash 30 dead
பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் 30 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையோர மாகாணங்களில் தெஹ்ரீக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்கள் அமைப்பு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையோரத்தில் அமைந்துள்ள பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினரும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் 30 பேர் உயிரிழந்தனர். இதில், 19 பேர் பயங்கரவாதிகள் என்றும், எஞ்சிய 11 பேர் பாதுகாப்புப்படை வீரர்கள் என்றும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மோதல் நடந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.