சவூதியில் ஹவுதிகளின் நாசகார செயலால் பதற்றம்; பதுங்குக் குழிகள் கொண்ட அரண்மனைகளுக்கு இடையே பாதுகாக்கப்படும் இளவரசர்..!
Prince in Saudi Arabia sheltered within a bunker equipped palace following Houthi attacks
ஏமனில் ஈரான் ஆதரவுப் பெற்ற ஹவுதி அமைப்புக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. சர்வதேச கடல்வழிப் பாதையான செங்கடல் பகுதியை ஹவுதி கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், அதனை மீட்கும் முயற்சியில் ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து சவூதி அரேபியா படைகளும் ஹவுதியினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
பதிலுக்கு ஹவுதிக்கள் சவூதி அரேபியாவின் பல முக்கிய விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
முக்கியமாக ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் பல முறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர் . 3-வது முறையாக நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்தத் தாக்குதலில் மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, சவூதி அரேபியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பலத்த பாதுகாப்பு கொண்ட, பதுங்குக்குழிகள் வசதியுள்ள அரண்மனைகளுக்கு இடையே மாறிமாறித் தங்குவதாக wall street journal பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினரின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்கள் ஆகும். சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மட்டுமின்றி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகச் சவூதி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நாட்டின் பரந்த நிலப்பரப்பில் உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பது சவாலாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பதற்றமான சூழலில், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, அவரை ஒரே இடத்தில் தொடர்ந்து தங்க வைக்காமல், பதுங்குக் குழிகள் கொண்ட பாதுகாப்பான அரண்மனைகளுக்கு இடையே அழைத்துச் செல்வதாகத் கூறப்படுகிறது. அவருடன் அவருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்புக் குழுவினரும் இருப்பதாக wall street journal செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவர் எந்தெந்த அரண்மனைகளில் தங்கியுள்ளார், எப்போது இடம் மாறுகிறார், தற்போது எங்கு இருக்கிறார் போன்ற குறிப்பிட்ட விவரங்கள் பொதுவெளியில் உறுதிப்படுத்தப்படவில்லை.
சவூதி அரேபியா எண்ணெய் வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் நாடு ஆகும். இந்த பொருளாதாரத்திலிருந்து சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச முதலீடுகளைச் சார்ந்த பொருளாதாரமாக மாற்ற முகமது பின் சல்மான் முயன்று வருகிறார். ஆனால், தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. .
மேலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் பாதுகாப்பு ஆயுதங்களின் இருப்பு குறைந்து வருவதாகவும், முக்கிய உள்கட்டமைப்புகளையும் அரச குடும்பத்தினரின் இருப்பிடங்களையும் ஒரே நேரத்தில் பாதுகாப்பதில் சவால்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
முக்கியமாக, பட்டத்து இளவரசர் அரண்மனைகளை மாற்றித் தங்குவதாக வெளியான தகவல், அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலின் தீவிரத்தைக் வெளிக்காட்டுகிறது.
English Summary
Prince in Saudi Arabia sheltered within a bunker equipped palace following Houthi attacks