தடையை மீறி போராட்டம் நடத்த முயற்சி; டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்பினர் கைது..!
Student group members arrested for attempting to stage a protest at Delhis Jantar Mantar in defiance of a ban
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை தலைநகர் டெல்லியில் எதிர்க்கட்சியினர் மற்றும் சிஜேபி அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் வலுப்பெற்ற நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, மாணவர் அமைப்பினர் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியின் முக்கியப் போராட்டக் களமாக விளங்கும் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாகப் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்து, மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறியதாவது;
போராட்டங்களைத் தடுப்பதற்காகவே இன்று ஜந்தர் மந்தர் பகுதி போராட்டம் நடத்த முடியாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை ஜனநாயகத்தையே முடக்க முயற்சி செய்வார்கள். இதற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றும், ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்குத் தனியார் நிர்வாகத்திடம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டியுள்ளது என்றும், மற்ற போராட்ட இடங்களும் நகரத்திலிருந்து 20 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. அத்தகைய இடங்களில் போராட்டம் நடத்தினால், மக்களிடம் எங்களது கோரிக்கைகளை எவ்வாறு கொண்டு சேர்க்க முடியும்? என்றும், தலைநகரில் போராட்டம் நடத்துவதன் மூலமாகத்தான் எங்களது கோரிக்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கு தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Student group members arrested for attempting to stage a protest at Delhis Jantar Mantar in defiance of a ban