கச்சத்தீவுக்கு திடீர் விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி: 'கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பில் எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்' என திட்டவட்டம்..!
President Anura Kumara Dissanayake inspection visit to Katchatheevu Island
'கச்சத்தீவை எந்த காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை' என இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (செப்டம்பர் 01) கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள மீனவர்களிடம் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி, தாக்குதல் நடத்துவதால், கைது செய்வதனாலும் மீனவர்களை பாதுகாப்பதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 'தமிழக மீனவர்கள் 800 பேர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு, கச்சத்தீவை மீட்பதே, நிரந்தரத் தீர்வு,' என கூறியிருந்தமை தொடர்ந்து மீண்டும் கச்சத்தீவு விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மதுரை மாநாட்டில், 'கச்சத் தீவை, இந்தியா திரும்பப்பெற வேண்டும் எனவும் அதற்கான, நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' எனவும் விஜய் வலியுறுத்தினார். இதையடுத்து, விஜய் பேச்சுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கண்டனம் தெரிவித்திருந்தார்.
அத்துடன், 'தமிழகத்தில் தேர்தல் காலங்களில், கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவது, தமிழக அரசியல்வாதிகளின் வழக்கம்' எனவும் விமர்சித்து இருந்தார்.
தற்போது, இலங்கை அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் கச்சத்தீவு மீட்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி, அதிபர் அனுர குமார, இன்று காலை, இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்குள்ள மயிலிட்டி துறைமுகத்தில், வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்ததோடு, யாழ்ப்பாணத்தில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் மாலை 05:00 மணியளவில் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறையில் இருந்து, நான்கு ரோந்து படகுகளுடன், கச்சத்தீவுக்கு திடீரென புறப்பட்டார். அங்கு ஒரு மணி நேரத்துக்கும் கச்சத்தீவை சுற்றிப் பார்த்த்தோடு, அங்குள்ள மீனவ மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அனுர அங்குள்ள மீனவர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 'நம் மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்,' என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், கச்சத்தீவின், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அதனையடுத்து, இலங்கை கடற்படையின் ரோந்து படகில் யாழ்ப்பாணம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் அந்நாட்டின் ஜனாதிபதி ஒருவர் கச்சத்தீவுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன், அவர், கச்சத்தீவு மீனவர்களுடன் பேசும்போது, 'இந்திய மீனவர்கள் விஷயத்தில் அதிரடியாக ஒரு முடிவெடுக்கப் போகிறேன் என்றும், இனி, இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து, மீன் பிடித்து இலங்கை கடற்படையிடம் சிக்கினால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை அவ்வளவு எளிதாக விட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், அவர்களிடம் இருந்து பிடிபடும் படகுகளை, தற்போது வரை மனிதாபிமான அடிப்படையில் திரும்ப ஒப்படைத்து வருகிறோம். இனி அதுபோல் நடக்காது என்றும், படகு பிடிபட்டால், அது இலங்கைக்கே சொந்தமாகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
President Anura Kumara Dissanayake inspection visit to Katchatheevu Island