37 ஹிந்து கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் மட்டுமே பாக்கிஸ்தான் செயல்பாட்டில் உள்ளது; பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்..!
Out of a total of 1817 Hindu temples in Pakistan only 37 are functional
பாகிஸ்தானில் மொத்தமுள்ள 1817 ஹிந்து கோயில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டு தலங்களில் 37 மட்டுமே செயல்பட்டு வருகிறதாக அதிர்ச்சி தகவலை அந்நாட்டு பாராளுமன்ற குழு முன்பு தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த குழு தலைவர் டானேஷ்குமார் குறிப்பிட்டுள்ளதாவது:
பாராளுமன்ற குழு, சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அரசியலமைப்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்பின் உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பாகிஸ்தானிய சிறுபான்மையினர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நீதி மற்றும் சமத்தும் கிடைப்பதற்கான கொள்கை சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அத்துடன், இந்த விவகாரம் குறித்து ரமேஷ்குமார் வன்க்வானி எம்பி கூறியதாவது: சொத்து மீட்பு குழுவானது, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை கவனிப்பதை கைவிட்டுவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்..
மேலும், இந்த குழுவின் தலைமைப்பதவியை முஸ்லிம் அல்லாத நபரிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்போது தான் புறக்கணிக்கப்பட்ட மத சொத்துகளை மறுசீரமைத்து முறையாக பராமரிக்க முடியும் எனவும், பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த இடங்களானது, மதரீதியிலான முக்கியத்துவத்தை மட்டும் அல்லாமல், பாகிஸ்தானின் கடந்த கால கலாசார பெருமைகளை பறைசாற்றும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இவரை தொடர்ந்து கேசோ மால் கேல் தாஸ் என்ற எம்பி குறிப்பிடுகையில், நாடு பிரிவினைக்கு பிறகு பெரும்பாலான கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் கைவிடப்பட்டன என்றும், உள்ளூரில் வசித்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற குழு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், வெறுப்பை தூண்டும் தகவல்கள் நீக்கப்படுவதுடன், சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். அவர்களுக்கான வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
English Summary
Out of a total of 1817 Hindu temples in Pakistan only 37 are functional