வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள் விதிப்பு - அமெரிக்கா நடவடிக்கை!
New visa restrictions imposed on foreign students US action
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக விசா தொடர்பான விதிகளில் தொடர்ந்து புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்குபவர்களை கண்டறியவும், மோசடிகளைத் தடுப்பதற்கும் இந்த மாற்றம் அவசியம் என அந்தத் துறை தெரிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, வெளிநாட்டு மாணவர்கள், தொழிலாளர்கள், ஊடக பிரதிநிதிகள் ஆகியோருக்கான விசாவில் காலக்கெடு நிர்ணயம் செய்யப்படுகிறது.
சர்வதேச மாணவர்கள் (F Visa) மற்றும் கலாச்சார பரிமாற்றத் திட்ட பார்வையாளர்கள் (J Visa) அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி பெறுவார்கள். அதற்குப் பிறகு அவகாசம் நீட்டிக்க தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது மாணவர்கள் படிக்கும் வரை, அல்லது வேலை செய்பவர்கள் வேலை தொடரும் வரை விசா நீட்டிக்கப்படும் நடைமுறை நீக்கப்படுகிறது.படிப்பு முடிந்த பின் வேலை தேடுவதற்கான 60 நாட்கள் அவகாசம், இனி 30 நாட்களாக குறைக்கப்படுகிறது.
முதுகலை படிக்கும் மாணவர்கள் ஒரு பாடத்திட்டத்திலிருந்து மற்றொரு பாடத்திட்டத்திற்கு மாறுவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுக்கு 240 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி வழங்கப்படும்.
இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டால், குறிப்பாக அமெரிக்காவில் உயர் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என கல்வி நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
English Summary
New visa restrictions imposed on foreign students US action