'கார்க் தீவு மீது கை வைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்'; டிரம்பிற்கு ஈரான் எச்சரிக்கை..!
Iran warns Trump of severe consequences if he touches Kharg Island
ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி முனையமான விளங்குவது 'வைர மகுடம்' என்று அழைக்கப்படும் கார்க் தீவு. இந்த தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றுவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது; ஈரானின் எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்துவது அல்லது கார்க் தீவைக் கைப்பற்றுவது ஒரு முக்கிய வாய்ப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, ஈரானின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருப்பதால் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த ராணுவ மிரட்டல்களுக்கு மத்தியிலும் ஈரானுடன் மிக விரைவாக ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட வாய்ப்புள்ளதாக டிரம்ப் பேசியிருந்தார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானில் உள்ள பல முக்கிய ராணுவ இலக்குகளை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளதாகக் டிரம்ப், குறிப்பிட்டுள்ளதோடு, தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை சிதைக்க வேண்டாம் என்று தான் தற்போதைக்கு முடிவு செய்துள்ளதாகக் கூறி இருந்தார்.

அத்துடன், ஒருவேளை ஈரான் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதேநேரம் ஈரானின் நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி பாகிஸ்தான் கொடியேந்திய 10 கப்பல்கள் ஏற்கனவே வந்துள்ள குறித்த நீரினை வழியாக வந்துள்ள நிலையில், மேலும் 20 கப்பல்கள் தற்போது வந்து கொண்டிருப்பதாகத் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனை ஈரானிடமிருந்து தனக்குக் கிடைத்த ஒரு "பரிசு" என்று வர்ணித்துள்ளார்.
இந்த சூழலில், அமெரிக்கப் படைகள் தங்கள் மண்ணில் கால் வைத்தால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது கடுமையான தரைவழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.
கார்க் தீவு மீதான டிரம்பின் இந்த ஆர்வம் தற்செயலானது அல்ல. கடந்த 1988-ஆம் ஆண்டிலேயே "கார்க் தீவை நாம் ஒரு கை பார்க்க வேண்டும்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மோதல் போக்கினால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலரைத் தாண்டியுள்ளது. இதன் அபாய நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் போன்ற உலகத் தலைவர்கள் அடுத்தக்கட்ட அவசர ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர்.
English Summary
Iran warns Trump of severe consequences if he touches Kharg Island