7வது நாளில் ஈரான் - இஸ்ரேல் போர்...! 30 ஈரான் போர்க் கப்பல்கள் அழிப்பு...! -அமெரிக்கா பரபரப்பு தகவல் - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான கடும் போர் இன்று 7-வது நாளாக தீவிரமடைந்து நீடிக்கிறது. ஈரானின் பல முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

ஈரானின் தலைநகர் தெக்ரானில் ராணுவ மற்றும் அரசு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் நகரம் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் ஒலித்தன. இன்று காலை ஜோம்ஹுரி அவென்யூ பகுதியில் உள்ள பரபரப்பான சந்தை மீது குண்டு வீசப்பட்டதில் அருகிலுள்ள குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

தொடர்ந்து நடந்த தாக்குதல்களால் மத்திய மற்றும் கிழக்கு தெக்ரானின் பல வீதிகள் வெறிச்சோடியன. இதேபோல் இஸ்பஹான் உள்ளிட்ட ஈரானின் பல நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.இந்த நிலையில், ஈரானின் டிரோன் விமானங்களை ஏந்திச் செல்லும் “ஐரிஸ் ஷாஹித் பகேரி” போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலில் கப்பலில் தீப்பற்றி எரிந்ததாகவும், அதற்கான வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. முழு ஈரானிய கடற்படையையும் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த போரில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஈரான் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இன்று தாக்கப்பட்ட கப்பல் இரண்டாம் உலகப்போர் கால விமானம் தாங்கி கப்பலின் அளவுக்கு சமமானது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தற்போது கணிசமாக குறைந்துள்ளன” என்றார்.

இதற்கிடையில், “6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி 2,500 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், போர் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது” என இஸ்ரேல் ராணுவ தளபதி தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக, நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஈரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை சரமாரியாக ஏவியது. அவற்றில் சில இஸ்ரேல் எல்லைக்குள் விழுந்து வெடித்ததால் நாடு முழுவதும் எச்சரிக்கை அலாரங்கள் ஒலித்தன.

மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் ஈரான் குறிவைத்து தாக்கியுள்ளது. பக்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஓட்டல் மற்றும் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், அங்குள்ள இஸ்ரேல் தூதரகமும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் டிரோன் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா பயன்படுத்தும் “அலி அல்-சலேம்” விமான தளம் மீண்டும் தாக்கப்பட்டது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் “அல் உதெய்த்” விமான தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.இதற்கிடையில், ஈரானுக்கு ஆதரவாக உள்ள லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது. தெற்கு பெய்ரூட்டில் ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில், பதிலுக்கு ஹிஸ்புல்லா இஸ்ரேல் எல்லைப் பகுதிகளை நோக்கி ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை ஏவியதாக தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் எல்லையிலிருந்து 5 கிலோமீட்டர் வரை வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran Israel war 7th day 30 Iranian warships destroyed US sensational news


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->